தீர்ப்பு சாதகமாக வந்த நிலையில் உயர் நீதிமன்றத்திலேயே இனிப்பு வழங்கி பன்னீர் தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் யாருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரும் என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்தநிலையில், இன்று காலை நீதிமன்றத்துக்கு வந்த நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிக்கப்பட்ட நேரமான 10.30 மணிக்குத் தீர்ப்பு வாசிக்காமல், தனது அறைக்கு சென்று தீர்ப்பில் இறுதி வடிவங்களை மேற்கொண்டார்.
இதனால், யாருக்குத் தீர்ப்பு சாதகமாக இருக்கும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்புடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருந்தனர்.
இந்நிலையில் 11.40க்கு மேல் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூடித்தான் பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்ட வேண்டும், ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும், இந்த ஆண்டில் டிசம்பர் வரை இனி பொதுக்குழுவைக் கூட்டக் கூடாது என்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பு பன்னீர் தரப்புக்குச் சாதகமாக அமைந்துள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்திலேயே அவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பின்னர் நீதிமன்றம், அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். ஓபிஎஸ் தரப்பு மகளிர் அணியினர் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பின் சாராம்சம் என்ன?