தேர்தல் ஆணையத்திலிருந்து எடப்பாடிக்கு வந்த கடிதம்: ஓபிஎஸ் அதிர்ச்சி!
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக நடைபெற உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அடுத்த அண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இதனையடுத்து வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாஹூ நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1) ஆலோசனை நடத்துகிறார்.
அதன்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் உடனான கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டு இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. பன்னீருக்கு அழைப்பு விடுக்காத நிலையில் ஓபிஎஸ் தரப்பு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறது.
இதுபோன்ற கூட்டம் நடத்துவதற்கு, தேர்தல் ஆணையம் சார்பில் அந்தந்த கட்சி அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்ட கட்சி அலுவலகத்துக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்!
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கம், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். ஜே.சி.டி.பிரபாகரன் மற்றும் மனோஜ் பாண்டியன் நியமனம் குறித்தும் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா