”அதிமுக பொதுக்குழு பற்றி உச்ச நீதிமன்றம் (பிப்ரவரி 23) கொடுத்த தீர்ப்பு முழுமையானது அல்ல. தன் பொறுப்பை உச்ச நீதிமன்றம் தட்டிக் கழித்திருக்கிறது. பொதுக்குழு செல்லும் என்று சொன்னதே தவிர பொதுக்குழுவின் தீர்மானங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை” என்று பன்னீர் தரப்பினர் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தனர்.
இன்று (பிப்ரவரி 24) ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன், “உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்றுதான் தீர்ப்பளித்திருக்கிறது.
பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்துதான் கூட்ட வேண்டும் என்பதை பற்றி சென்னை உயர் நீதிமன்றமும் சரி, உச்ச நீதிமன்றமும் ஏதும் சொல்லவில்லை.
வாதங்களை ஐந்து நாள் கேட்டார்கள். ஏன் கேட்டார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் எதைத் தீர்மானிக்க வேண்டுமோ அதை செய்யவில்லை.
அவர்கள் முடிவெடும் வகையில் எங்கள் நியாயங்களை சொல்ல எங்கள் தரப்புக்கு முடியவில்லையோ என்றுதான் கருதுகிறோம்” என்றார்.
பின்னர் பேசிய வழக்கறிஞரும் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன், “பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்பதைத்தான் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றி ஆராய விரும்பவில்லை என்று குறிப்பிடுகிறது. அதைத் தவிர இந்த பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டை நாடலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
அது எந்த நீதிமன்றம் என்றால், சென்னை உயர் நீதிமன்றம்தான்.
நாங்கள் அண்ணனிடம் (ஓ.பன்னீர்செல்வம்) அனுமதி பெற்று தக்க சட்ட நடவடிக்கை எடுப்போம். தீர்மானங்கள் செல்லுபடியாகும் என்று தீர்ப்பின் எந்த பகுதியிலும் இல்லை.
பொதுக்குழு கூட்டப்பட்டதே செல்லாது என்றுதான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம். அதன் தீர்மானத்தைப் பற்றியே நாங்கள் சொல்லவில்லை. பொதுக் குழுவே செல்லாது என்பதுதான் எங்கள் வழக்கு.
பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என்பதுதான் தீர்ப்பு. தேர்தல் ஆணையத்தில் இருக்கும் ஒருங்கிணைப்பாளர் என்ற பதிவை இந்தத் தீர்ப்பால் மாற்ற முடியாது” என்று கூறினார்.
அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன்,’மாப்பிள்ளை அவர்தான்… சட்டை என்னுடையது என்பதைப் போலத்தான் இந்தத் தீர்ப்பு” என்று சிரித்தார்.
–வேந்தன்
நீட் விலக்கு: தமிழக அரசின் புதிய மனு மீது விரைவில் விசாரணை
சி.வி.சண்முகம் அளித்த புகார்: தேர்தல் அலுவலர் சொன்ன சுவாரஸ்யம்!