தினகரனுடன் பன்னீர் ஆதரவு மாசெ  சந்திப்பு: சாஸ்தா கோவில் சம்பவம் பின்னணி!

அரசியல்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின்  தீவிர ஆதரவாளரும் தேனி  அதிமுக மாசெவுமான சையதுகான் சந்தித்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து இன்று (ஜூலை 31) பகல் 12 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு வருவதாக திட்டமிட்டிருந்தார். இதை முன்னிட்டு தேனி மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் அவரை வரவேற்க தேனியில் இருந்து மதுரைக்கு காலையில் புறப்பட்டனர்.

பெரும்பாலான நிர்வாகிகள் முன்னே போய்க் கொண்டிருக்க தேனி மாவட்டச் செயலாளர் சையது கானும், அவரது காரில்  கம்பம் நகர செயலாளர் ஜெகதீஷ், கேகே.பட்டி பேரூர் செயலாளர் திரிலோக சுந்தர் ஆகிய நிர்வாகிகளும் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சையது கான் யாருடனோ போனில் பேசிக் கொண்டே,  ‘சரிங்கண்ணே… அங்கனதான் வந்துக்கிட்டிருக்கோம்’  என்று தகவல் சொல்லிக் கொண்டிருந்தார். சரி,  மதுரைக்கு செல்வதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று மற்றவர்கள் நினைத்தனர்.

காலை பத்து மணிக்கு மேல் ஆன நிலையில், சையது கானின் கார் உசிலம்பட்டி கணவாய் சாஸ்தா கோயில் அருகே டிராபிக்கில் சிக்கியது. எதிரே வாகன அணிவகுப்புகளோடு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனியை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது சையது கான், ‘இறங்குங்கய்யா…. சாரை பாத்துட்டு போவோம்’ என்று சொல்ல அந்த நிர்வாகிகளும் சால்வைகளோடு காரில் இருந்து இறங்கினர்.

சாஸ்தா கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு புறப்பட்டுக் கொண்டிருந்த தினகரனைப் பார்த்து வணக்கம் வைத்தார் சையது கான். வாங்க வாங்க என்று பெரிதாக சிரித்த தினகரனிடம்,  கம்பம் நகர செயலாளர், கே.கே.பட்டி பேரூர் செயலாளர் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்தார் சையது கான். அவர்கள் தினகரனுக்கு சால்வை அணிவித்தனர். 

ஏற்கனவே தினகரனுக்கு மிகவும் பரிச்சயமானவர் சையது கான். அண்மையில் தேனி மாவட்ட அதிமுக சார்பில் பன்னீரின் பண்ணை வீட்டிலேயே கூட்டம் போட்டு அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள்  கட்சிக்குள் இணைக்கப்படவேண்டும் என்று சசிகலா, தினகரன் பெயரைச் சொல்லியே தீர்மானம் போட்டவர்தான் இந்த சையது கான்.

சாஸ்தா கோயில் வாசலில் பரஸ்பர  நலம் விசாரிப்புகளுக்குப் பின் சையது கான் மதுரை நோக்கிப் புறப்பட்டார். தினகரனும் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

இந்த நிலையில் சையது கான் அமமுகவில் சேர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அதை சையது கான் மறுத்திருக்கிறார்.

“எனது இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் வழியில் எனது கழக பணிகள் தொடரும்” என்று கூறியுள்ளார் சையது கான்.

ஓ.பன்னீரின் தீவிர ஆதரவாளரான சையது கான் திடீரென தினகரனை சந்தித்து வணக்கம் வைத்து நலம் விசாரித்தது பற்றி தேனி அதிமுக வட்டாரத்தில் பேசினோம்.

 “இதுல என்னங்க அதிசயம் இருக்கு? சையது கான்  எப்போதுமே சசிகலா, தினகரன் ஆதரவாளர்.  டிடிவியோட ஸ்லீப்பர் செல்தான் அவரு. ஓ.பன்னீரே ஒரு தினகரன் ஆதரவாளர்தானே…  அப்புறம் சையது கான் சந்திச்சதுல ஆச்சரியம் இருக்கு? தூக்கத்துல எழுப்பி கேட்டா கூட தினகரன் போன் நம்பரை சொல்லுவாரு சையது கான். ரெண்டு பேரும் தொடர்ந்து பேசிக்கிட்டுதான் இருக்காங்க. இப்ப கூட பேசிவச்சுட்டுதான் சந்திச்சிருக்காங்க. பன்னீர்கிட்ட சொல்லிட்டுதான் சந்திச்சிருப்பாரு. எடப்பாடியை எதிர்த்து  பன்னீர்-சசிகலா-தினகரன் எல்லாம் சேரவேண்டிய நேரம் வந்துடுச்சுங்க. அதனாலதான் சாஸ்தா கோயில் வாசல்ல இந்த சந்திப்பு நடந்திருக்கு” என்கிறார்கள்.

ஆரா

+1
0
+1
2
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0