அதிமுகவின் தற்போதைய துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி, தன்னிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஆடியோவை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவின் ஓபிஎஸ் அணியும், ஈபிஎஸ் அணியும் போட்டியிட்டன. இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் திரும்ப பெறப்பட்டார்.
ஈபிஎஸ் தரப்பினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “கட்சிக்கு எதிராக செயல்பட்டு அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ் வெகுதூரம் சென்றுவிட்டார். இனி எந்த சூழலிலும் எங்களுடன் சேர்ந்துகொள்ள வாய்ப்பில்லை” என்று கூறினார்.
இந்தசூழலில் இன்று (பிப்ரவரி 16) ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
கே.பி.முனுசாமியை தாக்கி பேசிய அவர், “ஈரோடு கிழக்கில் கே.பி.முனுசாமி பேட்டி கொடுத்திருக்கிறார். ஐயாவுக்கு(ஓபிஎஸ்) அதிமுகவில் இடமே கிடையாது. அதிமுகவை விட்டு ரொம்ப தூரம் சென்றுவிட்டார்.
மீண்டும் வந்தால் கூட உண்மையாக உழைப்பாரா என்று கேட்டிருக்கிறார்.
யாரை யார் கேள்வி கேட்பது. அவர்தான் உங்களுக்கு அடையாளமே. உழைப்பாரா உழைப்பாரா என்று கேட்கிறார்.
இவர்(கே.பி.முனுசாமி) உழைப்பவர்தான். எப்படி உழைப்பார் என்றால் வாங்கிய காசுக்கு உழைப்பார்.
அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி.தேர்தலுக்காக அதிமுகவுக்கு எதிராக உழைத்து கொடுத்தார். அதனால் தான் அவரை அம்மா மா.செ பதவியில் இருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கினார்.
அந்த பதவி வாங்கித் தருகிறேன், இந்த பதவி வாங்கி தருகிறேன் என வசூல் செய்யக்கூடியவர் இவர். எங்கு பண பசை இருக்கிறதோ அங்கு ஒட்டக்கூடியவர். இங்கு சம்பாதிக்க முடியாது என்பதால் எடப்பாடியிடம் சென்றுவிட்டார்.
இப்போது பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் என்ன உழைக்கிறார் என்று தெரியவில்லை.
எனவே இவரது வண்டவாளத்தை வெளியிடுகிறேன். என்னிடம் ஒரு கோடி ரூபாய் கே.பி.முனுசாமி கேட்ட ஆடியோ இருக்கிறது. அதை வெளியிடுகிறேன் எனக் கூறி வெளியிட்டார்.
அதில்,
கே.பி.முனுசாமி: ஹெலோ
கிருஷ்ணமூர்த்தி : அண்ணே கிருஷ்ணமூர்த்தி பேசுறேன். ஒன்னுலண்ணா இப்ப 50 ரெடி பண்ணிருக்கேன், பேலன்ஸ் மதியத்துக்குள்ள எதாவது ஐடியா பண்ணிட்டு பன்றேன்
கே.பி: சரி
கி.மூ: எப்டிணா வரணும்?
கே.பி.: மதியத்துக்குள்ள எவ்ளோ முடியும்?
கி.மூ: 11 மணிக்குள்ள 50 ரெடி பண்ணிருவேன். ஈவினிங்குள்ள மீதி 50-ஐ கரெக்ட் செய்துவிடுவேன். எப்படி எடுத்துட்டு வருவது?
கே.பி: மகனை அனுப்பி வைக்கிறேன். இப்ப அனுப்பி வைக்கவா..
கி.மூ: இல்லணா சரியா 11 மணிக்கு வரட்டும்
கே.பி.: இல்லப்பா இப்ப அனுப்புனாதான் 11 மணிக்கு அங்க வரமுடியும்.
கி.மூ: அனுப்பி விடுங்கண்ணா, சரிண்ணா…
என்று அந்த உரையாடல் முடிகிறது.
மற்றொரு ஆடியோவில் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும், கே.பி.முனுசாமியின் கார் ஓட்டுநரும் பேசுவது போன்று பதிவாகியுள்ளது.
இரு ஆடியோவையும் வெளியிட்ட பிறகு பேசிய கிருஷ்ணமூர்த்தி, “இது 2021 தேர்தலின் போது நடந்தது. கொளத்தூர் தொகுதிக்கு மாவட்ட செயலாளர்(?) வாங்கித் தருகிறேன் என்று கூறி இந்த ஒரு கோடி ரூபாயை கேட்டார்.
கே.பி.முனுசாமி ஒருமுறை என்னை வர சொன்னார். அப்போது என்னுடைய வண்டியில் 4 பையை ஏற்றினார்கள்.பண பைதான் அது. இவர் என்னமோ கட்சிக்கு தியாகி மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். சீசனுக்கு ஏற்ற மாதிரி வியாபாரம் செய்பவர் முனுசாமி.
கட்சி அலுவலகத்தில் எடப்பாடிக்கும், பன்னீருக்கும் இடையே ஒரு பிரச்சினை வந்தது. அப்போது கலைந்து செல்லும் போது பன்னீரின் காலை பிடித்து கதறியவர் முனுசாமி.
தர்மயுத்தம் செய்தபோது இவர் மாதிரி ஒரு தலைவர் கிடையாது என்று பன்னீரை புகழ்ந்து பேசியவர் முனுசாமி.
இதோடு அவர் வாயை முடிக்கொள்ள வேண்டும். ஒரு வீடியோவுடன் சேர்த்து கமிஷனர் ஆபீஸில் ரிலீஸ் ஆக வேண்டிய ஆடியோ இது. வேண்டாம் என்றுதான் அமைதியாக இப்போது ரிலீஸ் செய்கிறேன். ஓபிஎஸிடம் இருந்துகொண்டு எடப்பாடிக்கு எட்டப்பன் வேலை செய்தவர் முனுசாமி.
நான் வீடியோவை ரிலீஸ் செய்தால் அவரை அந்த அணியில் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். யார் யாரிடம் எவ்வளவு வாங்கியிருக்கிறார் என்று அவரை லிஸ்ட் போட சொல்லுங்கள். நிறைய பணம் கொடுத்திருக்கிறேன். கொடுத்ததை திரும்ப கொஞ்சம் வாங்கியும் இருக்கிறேன்” எனக் கூறினார்.
இது அவருடைய குரல் தான். இதற்கு பதில் சொல்லவில்லை எனில் பெரிய வீடியோவை வெளியிடுவேன் என்றார். அதுபோல் தங்கமணி, வேலுமணி குறித்த ஆடியோவையும் வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டார்.
பிரியா
இன்னும் எத்தனை காலம் இப்படி பேசுவீங்க? : எடப்பாடியிடம் கேள்வி எழுப்பிய இயக்குநர்
‘மில்லியன் டாலர் படம்’ – ரசிகர்கள் நெகிழ்ச்சி!