அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த தாக்குதல் அதிமுகவை அழித்து ஒடுக்குவதற்காக துரோகிகளுடன் சேர்ந்து ஆளுங்கட்சி முதல்வர் ஸ்டாலின் போட்ட திட்டம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவை இன்று (ஜூலை 11) நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் கூட்டம் நடந்தது. அங்கு இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி இன்று பிற்பகல், தனது ஆதரவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர், இன்று காலை அதிமுக அலுவலக தாக்குதலில் காயமடைந்த நிர்வாகிகளை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
“அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, கட்சியின் தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தினர். ஏற்கெனவே பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது இதுபோன்ற தாக்குதல் நடைபெறும் என்று அதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையரிடமும், ராயப்பேட்டை காவல் நிலையத்திலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மூலம் பாதுகாப்பு கோரி மனு கொடுத்திருந்தோம்.
31 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அதிமுக தமிழகத்தில் தற்போது பிரதான எதிர்கட்சியாக உள்ளது. பாதுகாப்பு கேட்டு மனு அளித்தும் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அதோடு கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும்போது, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் அதிமுக ரெளடிகளுடன் வந்து தாக்குதல் நடத்தியது உண்மையில் வேதனையளிக்கிறது. கண்டனத்திற்குரியது. எந்த ஒரு தலைவராவது, தனது சொந்தக்கட்சி நிர்வாகிகளை தாக்குவார்களா? அவர் அதை தடுக்கவல்லவா செய்திருக்க வேண்டும்.
மாறாக துணை முதல்வர், கழக ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை கொடுத்ததற்கு சிறந்த வெகுமதியை அளித்துவிட்டார் ஓபிஎஸ். இன்று இத்தகைய அதிகாரத்தை கொடுத்த நிர்வாகிகளை, தொண்டர்களை தாக்கும் எண்ணம் மனசாட்சி இல்லாத மிருகத்திற்கு தான் வரும். ஓபிஎஸ் ஐ சுயநலவாதி என்றே சொல்லலாம். நாங்கள் அவர் பொதுக்குழு கூட்டத்திற்கு வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் வரவில்லை. ” என்று கடுமையாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி.
மேலும், “மீன்பாடி வண்டிகளில் கற்களுடன் வந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளார்கள். பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர் அந்த ரெளடிகளை தடுக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிட்டது. 31 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த கட்சிக்கே இந்த நிலை என்றால், சாதாரண மனிதர்களின் நிலையை நாட்டு மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். இது அதிமுகவை அழித்து ஒடுக்குவதற்காக துரோகிகளுடன் சேர்ந்து ஆளுங்கட்சி முதல்வர் ஸ்டாலின் போட்ட திட்டம் தான் என்பது நிரூபணமாகி உள்ளது. நிச்சயமாக காலம் மாறும். இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கும், புகார் கொடுத்தும் பாதுகாப்பு அளிக்காத காவல்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மூலம் தக்க பாடம் புகட்டுவோம்.” என்று தெரிவித்தார்.
–கிறிஸ்டோபர் ஜெமா