திமுகவோடு உறவு வைத்திருக்கும் ஓபிஎஸ்: எடப்பாடி தாக்குதல்

அரசியல்

இன்று (ஜூலை 11) அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரான பிறகு பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாகத் தாக்கினார்.

“அண்ணன் நத்தம் விசுவநாதன் கொண்டுவந்த தீர்மானத்தை நிறைவேற்றினீர்கள். அண்ணன் ஓபிஎஸ் இந்த பிரச்சினையை கொண்டுவந்தபோதே நமது நிர்வாகிகள் சமாதானம் பேசினார்கள். யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வரலாம். ஆனால் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் அவர் கடைசி வரை ஒப்புகொள்ளவே இல்லை. அண்ணன் ஓபிஎஸ் இடத்திலே பலரும் பேசினார்கள். நான் தான் விட்டுக் கொடுத்தேன் என்கிறார். நாங்கள்தான் விட்டுக் கொடுத்தோம்.

அம்மாவுக்கு விசுவாசமா இருந்தேன் என்கிறார். ஆனால் 1989 இல் அம்மாவுக்கு எதிரணியில் இருந்த வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு சீஃப் ஏஜென்ட்டாக இருந்தீர்கள்.

நான் 48 ஆண்டுகாலம் அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்து வருகிறேன். கிளைச் செயலாளரில் தொடங்கி இப்போதுவரை என்னால் முடிந்த நன்மைகளை செய்துவருகிறேன். என்னை நீங்கள் முதலமைச்சர் ஆக்கினீர்கள். ஆனால் நான் முதலமைச்சர் என்ற உயரத்தில் இருந்தேனா… இல்லை. உங்களில் ஒருவராகத்தான் இருந்தேன். அதேபோல் இப்போது பொதுச் செயலாளராக ஆக்கியிருக்கிறீர்கள். அதேபோல இப்போதும், பணியாற்றுவேன். கட்சிதான் எனக்கு உயிர்.

அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் திமுகவோடு உறவு வைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்சித் தலைவரே இப்படி உறவு வைத்துக் கொண்டால் அந்த கட்சி எப்படி ஆட்சிக்கு வரும்?” என்று ஓபிஎஸ்சை கடுமையாகத் தாக்கினார் எடப்பாடி பழனிசாமி.

வேந்தன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.