எடப்பாடியின் வளர்ச்சி குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் பாராட்டியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளால் நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகளுக்குப் பஞ்சமில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரண்டு தரப்பினரும் மாறிமாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி ‘ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் திமுகவின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர்’ என பல இடங்களில் விமர்சனத்தை வைத்துவருகிறார்.
இந்த நிலையில் தம்மீது எடப்பாடி பழனிசாமி தெரிவித்த விமர்சனங்களுக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் இன்று (ஆகஸ்ட் 20) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், “அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நினைக்கிறார். அனைவரும் ஒன்றாகச் செல்ல வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணம். ’எதிர்தரப்பினர் நாங்கள் திமுகவின் ஆதரவாளர்கள்’ என எங்கள்மீது ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.
ஆனால் காலத்தின் நிர்பந்தமாக நான் யாரையும் குற்றம் சொல்லமாட்டேன். அதேநேரத்தில் இன்று அதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

அதிமுகவில் எல்லோரும் ஒரு குடும்பமாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதில் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சி, உழைப்பு ஆகியவற்றை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.
அதிமுகவில் நம்பிக்கை பாத்திரமாக விளங்குபவர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இது, அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். தம்முடைய பதவிக்காக எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக மாறுபட்ட கருத்துகளைப் பேசி தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார். இதை நினைக்கும்போது உண்மையிலேயே மனம் கஷ்டமாக இருக்கிறது.
‘ஒருங்கிணைப்பாளர் கட்சிக்காக உழைக்கமாட்டார். ஆனால், அவரது குடும்பத்துக்கு பதவி மட்டும் வேண்டும்’ என அண்ணன் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார்.
2002-03ம் ஆண்டில் வெளிநாட்டில் படிப்பதற்கான சூழ்நிலை எனக்கு அமைந்தது. ஆனால், அப்போது நான் எடுத்த முடிவு அதிமுகவில் கடைசிவரை இணைந்து பயணிக்க வேண்டும் என்பதுதான்.
தேனி மாவட்டத்தில் பல பாசறைகளை உருவாக்கி கொடுத்துள்ளேன். அதன்மூலம் பல லட்சம் ரூபாய் வசூல் செய்து கட்சிக்காக நிதி கொடுத்துள்ளேன். அதிமுகவிற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன்.
சேலம் மாவட்டத்தில் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக கூட்டத்தை நடத்தியுள்ளேன். இது அனைத்தும் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு நன்கு தெரியும்.
நான் தேனி மாவட்டத்தில் பல தேர்தலுக்கு களப் பணியாற்றி உள்ளேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘அடுத்தமுறை வாய்ப்பு வரும்போது நீ களமிறங்கலாம்’ என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
ஆனால், நான் விடாப்பிடியாக தேர்தலில் சீட் கேட்டு வாங்கி ஜெயித்து காட்டினேன். திசா கமிட்டியில் உறுப்பினராக உள்ளதாலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தாம் சந்திக்க நேர்ந்தது.
மக்கள் பிரச்னைகளை எடுத்துரைப்பதற்காகத்தான் இந்த சந்திப்பு நடந்தது. அரசியல் நோக்கங்களுக்காக அல்ல” என்றார்.
ஜெ.பிரகாஷ்