அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பிரதிநிதியாக ஓபிஎஸ் மகன்!

Published On:

| By Kavi

நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில், அதிமுக சார்பில் தேனி எம்.பி.ஓ.பி.ரவீந்திரநாத் பங்கேற்றார்.

அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து ரவீந்திரநாத் நீக்கப்பட்டதாக அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பபட்டிருந்தது.

எனினும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடந்த ஜூலை 6ஆம் தேதி ரவீந்திரநாத் எம்.பி.க்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில் “நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில்  முக்கியமான பிரச்சினைகள் மற்றும் அலுவல்களைப் பற்றி விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) அமைக்கும் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பிற்கு உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்தை பகிர்ந்து, இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்துகொள்ள இருப்பதாக ஓ.பி.ரவீந்திரநாத் ட்வீட் செய்திருந்தார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  “நாடாளுமன்றத்திலும் ஓ.பி.ரவிந்திரநாத் அதிமுக கட்சியே இல்லை என்று கடிதம் சமர்ப்பித்துள்ளோம். ஓ.பி.ரவிந்திரநாத்துக்கும் அதிமுகவுக்கு சம்பந்தம் இல்லை. அவரை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்தால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படப்போவது கிடையாது. சுயேட்சை எம்.பி. என்ற அடிப்படையில் அழைத்திருக்கலாம்” என்று கூறியிருந்தார்.

இந்தசூழலில் இன்று மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் தேனி எம்.பி.ரவீந்திரநாத் கலந்துகொண்டுள்ளார். அவருக்கு முன் ‘பி.ரவிந்திரநாத், அதிமுக’ என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் அருகில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமரவைக்கப்பட்டார்.  இதனை அதிமுகவினர் பெருமையாக பேசி வந்த நிலையில் இன்று ஓபிஎஸ் மகன் கலந்துகொண்ட கூட்டத்தில் அவர் அதிமுகவின் அடையாளமாக கருதப்படும் வகையில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தங்கள் கட்சி பெயரை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அதிமுக சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அதிமுக என்று குறிப்பிட்டு பெயர் வைத்திருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து அ.இ.அ.தி.மு.க மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு சிறப்பித்தேன்  என்றும் ஓபிஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

ED ரெய்டுக்கெல்லாம் அஞ்சப்போவதில்லை: மு.க.ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share