விரைவில் கூடுகிறது சட்டப்பேரவை: ஓபிஎஸ்சுக்கு இடம் எங்கே?

அரசியல்

தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கூட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை எங்கே என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்சினையைத் தொடர்ந்து, கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக பழனிசாமி அறிவித்தார். அதேபோல, பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

இந்த போராட்டம் சட்டப் போராட்டமாக மாறி தற்போதைய சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பின்படி இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகிறார். இந்த அடிப்படையிலேயே இன்று (செப்டம்பர் 20) அவர் மத்திய உள்துறை அமைச்சரவையும் சந்தித்துள்ளார்.

இதற்கிடையே சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி, அப்பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்துள்ளதாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி அறிவித்தார்.

இது தொடர்பான கடிதத்தை, எதிர்க்கட்சிக் கொறடா எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் செயலர் அலுவலகங்களில் வழங்கினார்.

இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், அதிமுக பொதுக்குழு கட்சியின் சட்ட விதிகளின்படி நடைபெறவில்லை. பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இதைச் சுட்டிக்காட்டி அதிமுக சார்பாக சட்டமன்ற பதவிகள் குறித்து மனுக்கள் வந்தால் அதை நிராகரிக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி கடிதங்கள் குறித்து பேசிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, ஜனநாயக முறையிலும், சட்டப்படி, விதிப்படி, நியாயமாக, ஒருதலைபட்சமின்றி இந்தக் கடிதங்களை பரிசீலித்து, தக்க நடவடிக்கை எடுப்பேன்.

எனக்கோ அல்லது தமிழக முதல்வருக்கோ, தனிப்பட்ட முறையில் யார் மீதும் விருப்பு, வெறுப்பு எதுவும் கிடையாது. இது அவர்கள் உட்கட்சி விவகாரம். இதை அவர்கள்தான் சரிசெய்து கொள்ள வேண்டும்.

அவர்கள் கொடுத்துள்ள கடிதங்கள் தொடர்பாக சட்டப்பேரவை விதிகளை ஆராய்ந்தும், வழக்கறிஞர்களுடன் ஆலோசித்தும் தக்க முடிவு எடுப்பேன்” என்றார்.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக சட்டமன்ற கூட்டத்தொடரை ஐந்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு சட்ட மசோதா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை,

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆறு மாதத்துக்கு ஒரு முறை தமிழக சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்பது பேரவை விதி. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றம் கூட்டப்பட்டு 6ம் தேதி முதல் மே பத்தாம் தேதி வரை துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. இந்தநிலையில் அடுத்த மாதம் சட்டமன்றம் கூட்டப்பட இருக்கிறது.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இருக்கைக்கு பக்கத்தில் தான் துணைத்தலைவர் இருக்கையும் இருக்கும். தற்போது அந்தப்பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாலும், அதிமுகவில் இருதரப்புக்கும் பிரச்சினை நீடிப்பதாலும் சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் இடம் எங்கே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பன்னீர்செல்வம் திமுகவோடு தொடர்பில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடர்ந்து புகார் சொல்கிறார்கள்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடம் எங்கே ஒதுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து எடப்பாடி தரப்பின் இந்த புகார் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரிந்துவிடும்.

கலை.ரா

விற்கப்படும் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள்!

வெந்து தணியாத கௌதம் வாசுதேவ் மேனன்: காரணம் ப்ளூ சட்டை மாறன்

+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.