அதிமுகவின் கட்சி நிதியை தவறாக பயன்படுத்துகிறவர்களுக்குத் தண்டனை உறுதியாக வழங்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
திருச்சியில் இன்று (ஏப்ரல் 24) முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது,
“அதிமுகவின் வேராகவும் விழுதுகளாகவும் இருப்பது தொண்டர்கள் தான். தமிழகத்தில் 30 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான். எம்ஜிஆர் இறந்தபோது 16 லட்சம் தொண்டர்களாக இருந்ததை ஜெயலலிதா 1.5 கோடியாக மாற்றினார்.
கழக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கு தொண்டர்களுக்கு உரிமையை தந்தார். எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டவிதியை ஜெயலலிதா கண்ணாக பாதுகாத்தார். கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலிதா தான் என உண்மையான பொதுக்குழுவில் நாம் தீர்மானம் நிறைவேற்றினோம்.
அதற்கு பின்னால் வந்த கபட வேடதாரி அரசியல் வித்தகர்கள் சட்ட விதிகளை மாற்றுகின்ற நயவஞ்சகர்களாக இருக்கிறார்கள்.
அம்மாவிற்கு பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தை நீங்கள் வழங்கினீர்கள். அதனை ரத்து செய்கின்ற கல் நெஞ்சக்காரர்களை ஓட ஓட விரட்ட வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை.
13 ஆண்டுகாலம் நான் கழகத்தின் பொருளாளராக இருந்தேன். நான் பொருளாளர் பதவியை ஏற்ற காலத்தில் ரூ.2 கோடியாக நம்முடைய கட்சி நிதி இருந்தது. அதனை அம்மாவின் உதவியுடன் ரூ.256 கோடி ரூபாயாக உயர்த்தினேன்.
நயவஞ்சகத்தால் கட்சியின் நிதியை அவர்கள் கையில் வைத்துக்கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் உங்களுக்கு மனசாட்சி இருந்தால் கழகத்தின் பணத்தை ஒரு பைசா செலவழிக்கக்கூடாது. அந்த நிதியை தவறாக பயன்படுத்தியவர்களுக்கு தண்டனை உறுதியாக வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்