திருச்சி வந்த பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (ஜனவரி 3) தெரிவித்துள்ளார். ops says pm modi meeting
சென்னையில் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “திருச்சி வந்த பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன். அதன்படி வரவேற்பதற்கும் அனுப்பி வைப்பதற்கும் வாய்ப்பு தந்தார்கள். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை.
நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க வாய்ப்புகள் வரும்போது, உறுதியாக டெல்லி செல்வேன். பொதுவாக நான் பிரதமரை சந்திக்கும் போது வாழ்த்து கடிதங்கள் கொடுப்பேன். அதன்படி நேற்று பிரதமர் மோடியை சந்தித்த போதும் வாழ்த்து கடிதம் கொடுத்தேன்.
எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளுக்கு உச்சநீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகும் வரை எங்களது சட்ட போராட்டம் என்பது தொடரும்.
சசிகலா விரும்பினால் உறுதியாக அவரை சந்திப்பேன். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். பாஜகவுடனும் இணைந்து பணியாற்றுவதற்கான நல்ல சூழல் இருக்கிறது. இந்த நிமிடம் வரை பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறோம்.
சிறுபான்மையினர் ஓட்டு எங்களுக்கு தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது சுத்த பொய். கொங்கு மண்டலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது மக்களுக்கு கடுமையான வெறுப்பு இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது தலைமை செயலகத்தில் அவருடைய சேம்பருக்கு சென்று ஆட்சிக்கு கெட்ட பெயர் வருகிறது. இந்த வழக்கை விரைந்து முடியுங்கள் என்று கூறினேன். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது திமுக ஆட்சியிலும் நடவடிக்கை இல்லை” என்றவரிடம்
கடந்த கூட்டத்தில் ஜெயலலிதாவிற்கு ரூ.2 கோடி கடன் கொடுத்திருந்ததாக கூறியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பன்னீர் செல்வம், “ரெக்கார்ட் பூர்வமாக ஜெயலலிதா ரூ.2 கோடி கட்ட வேண்டியிருந்தது. கட்சி நிதியிலிருந்து அந்த பணத்தை கொடுங்கள், ஒரு வருடத்தில் தந்து விடுகிறேன் என்று என்னிடம் கூறினார். நான் காசோலை மூலமாக ரூ.2 கோடி கொடுத்தேன். அந்த பணத்தை ஜெயலலிதா காசோலையாக திருப்பி கொடுத்துவிட்டார். நான் பொருளாளராக இருந்தபோது பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்கையில் இதனை தெரிவித்திருக்கிறேன்.
திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக பதவியேற்றதிலிருந்து வரவு செலவு கணக்கை நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று கேட்கப்போகிறோம். அதற்கு அவர்கள் தக்க பதில் சொல்ல வேண்டும்.
தமிழக அரசு பொங்கல் பரிசு தொகையாக ரூ.3000 வழங்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வருவார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
உச்ச நீதிமன்ற தீர்ப்பு : அதானி ரியாக்சன்!
திடீர் மாற்றம்: புத்தகக் காட்சியை துவக்கி வைக்கும் அமைச்சர் உதயநிதி
ops says pm modi meeting