“பிக் பாக்கெட் அடிக்கிறார் எடப்பாடி”: பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓபிஎஸ்

பிக் பாக்கெட் அடிப்பது போல பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தேர்தலை நடத்துகின்றனர் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுவை எடப்பாடி பழனிசாமி இன்று தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்திருப்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என்று நாங்கள் கருதுகிறோம். அதிமுகவின் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டவிதிகள் வகுக்கப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட விதிகளின்படி தேர்தல் நடைபெறவில்லை.

நீதிமன்றங்களிலும் தேர்தல் கமிஷனிலும் அதிமுக பொதுக்குழு வழக்கு உள்ளபோது பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்துவது போன்றதாகும். இதனை நாங்கள் கண்டிக்கிறோம். சட்டரீதியாக இதனை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

ஓ.பன்னீர் செல்வம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு இறுதி மூச்சு வரை நம்பிக்கைக்குரியவராக உடன் இருந்தவர். இனியும் இவர்கள் திருந்துவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை

புரட்சி தலைவரையும், புரட்சி தலைவியையும் நம்பிய உண்மையான தொண்டர்கள் இந்த தேர்தலை பொருட்படுத்தாமல் புறக்கணியுங்கள். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளோம்” என்றார்.

ஓ.பன்னீர் செல்வம் பேசியபோது, “5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கழக அமைப்பு ரீதியிலான தேர்தல் நடைபெறும் என்பது தான் சட்டவிதிகள். எதையும் முறைப்படி செய்யாமல் பிக் பாக்கெட் அடிப்பது போல பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தேர்தலை நடத்துகின்றனர்.

அதிமுக பொதுக்குழு அராஜகத்துடன் நடைபெற்றது. பொதுக்குழுவில் என்னை நோக்கி வந்த தண்ணீர் பாட்டில்கள் குறித்து உங்களுக்கு தெரியும். தண்ணீர் பாட்டிலை பார்த்தாலே இப்போதெல்லாம் எனக்கு அலர்ஜியாக உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் பொதுக்குழுவை அங்கீகரிக்கவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி தோற்கடித்தார்.

தானும் தன்னை சுற்றி இருப்பவர்களும் மட்டுமே பதவிக்கு வர வேண்டும் என்று சட்டவிதிகளை திருத்துவது எந்தவகையில் நியாயம்.

எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி எங்கு சென்றாலும் அவருக்கு எதிரான எதிர்ப்பு அலை உருவாகும்.

ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் திருச்சியில் மாநில மாநாடு நடைபெறும். அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டத்திலும் கூட்டங்கள் நடைபெறும்” என்றார்.

செல்வம்

வீட்டுவசதி வாரிய வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு!

கன்னியாகுமரி வந்தடைந்தார் திரவுபதி முர்மு

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts