வைஃபை ஆன் செய்ததும் திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய ஆலோசனைக் கூட்ட வீடியோக்கள் வந்து விழுந்தன. கூடவே, ‘ஓபிஎஸ் சின் திருச்சி மாநாட்டுக்கு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் வருவார்களா?’ என்ற கேள்விகளும் வந்து விழுந்தன.
அவற்றுக்கு வாட்ஸ் அப் தனது பதிலை மெசேஜாக டைப் செய்யத் தொடங்கியது. “ ஓ.பன்னீர்செல்வம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி திருச்சி ஜி கார்னரில் முப்பெரும் விழாவை ஏற்கனவே அறிவித்தார். அதற்கான ஆயத்த ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 10 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஓ.பன்னீர் செல்வம் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘நீங்கள் நடத்தும் மாநாட்டில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கலந்துகொள்வார்களா?’ என்று கேட்டார்கள். ‘அனைவருக்கும் அழைப்பு அனுப்புவோம்’ என்று பதிலளித்தார் பன்னீர். ஆனால் வெளிப்படையாக சசிகலா, தினகரன் ஆகியோரைக் குறிப்பிட்டு ஏதும் பதில் சொல்லவில்லை.
இந்த நிலையில்தான் திருச்சி மாநாட்டுக்கு சசிகலா, தினகரன் ஆகியோர் வருவார்களா என்ற கேள்வி வலுவாக கேட்கத் தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் பன்னீர்செல்வத்தின் தாயார் மறைந்த நிலையில் பல்வேறு தலைவர்கள் அவரை சந்தித்து இரங்கல் தெரிவித்தனர். பாஜக தலைவர் அண்ணாமலை பெரியகுளம் வீட்டுக்கே சென்று பன்னீரை சந்தித்தார். தாயாருக்குரிய சடங்குகள் முடித்து சென்னை சென்ற பன்னீரை சந்தித்து இரங்கலும் ஆறுதலும் தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்தபோது விமான நிலையத்தில் தன்னை வரவேற்ற பன்னீரிடம் அவரது தாயாரது மறைவு குறித்து தனது இரங்கலை தெரிவித்தார். மோடி வரைக்கும் பன்னீரிடம் நேரடியாக அவரது தாயாருக்காக இரங்கல் தெரிவித்துவிட்டார். ஆனால் இப்போதுவரை சசிகலா, தினகரன் ஆகியோர் பன்னீரின் தனிப்பட்ட இழப்புக்காக கூட அவரை சந்திக்கவில்லையே என்ற கேள்வி பன்னீர் தரப்பில் எதிரொலிக்கிறது.
இந்த நிலையில் சசிகலாவுக்கும் பன்னீருக்கும், டிடிவி தினகரனுக்கும் பன்னீருக்கும் இடையே நிலவும் இடைவெளியை குறைக்க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார். சசிகலாவோடு சுமுகமான உறவில் இருக்கும் வைத்திலிங்கம் அண்மையில் சசிகலாவை சந்தித்திருக்கிறார். அப்போது பன்னீர், சசிகலா, தினகரன் ஆகிய மூவருக்கும் அரசியல் பிடிமானம் இல்லாத இந்த நேரத்தில் இந்த மூன்று பேரும் திருச்சி மாநாட்டில் ஒற்றுமையாக மேடையேறுவது மூவருக்கு மட்டுமல்ல அதிமுகவுக்கும் நன்றாக இருக்கும் என்று எடுத்துக் கூறியிருக்கிறார். சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையே இன்னும் சில பிரச்சினைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில்…. இந்த மூவரும் தங்களுக்கு இடையே இருக்கும் தடுப்பணைகளை உடைத்துவிட்டு திருச்சியில் சந்திக்க வேண்டும் என்பதில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் வைத்திலிங்கம்.
எடப்பாடிக்கு எதிராக என்ற குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் திருச்சியில் இந்த மூவரும் கூட வேண்டும், அதிமுகவின் மும்மூர்த்திகளாக சசிகலா, டிடிடி, ஓபிஎஸ் ஆக வேண்டும் என்பதுதான் வைத்திலிங்கத்தின் செயல்திட்டமாக இருக்கிறது என்கிறார்கள் தஞ்சை வட்டாரத்தில்.
சித்திரை முதல் நாளன்றோ அல்லது அடுத்த சில நாட்களிலோ வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரோடு சசிகலாவையும் தினகரனையும் பன்னீர் சந்திக்கும் நிகழ்வுக்கான திட்டமிடல்கள் நடந்து வருகின்றன என்பதுதான் இந்த சித்திரை முக்கோணக் கூட்டணி முயற்சிகளின் லேட்டஸ்ட் நிலவரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா: செந்தில் பாலாஜி
பிஞ்சுக் குழந்தையை சிதைத்த முதிய பிசாசு – தமிழக பயங்கரம்!