வைஃபை ஆன் செய்ததும், ‘பெரிதாக சத்தமில்லையே… அதிமுக தரப்பில் என்ன நடக்கிறது?’ என்ற கேள்வி மெசஞ்சரில் மின்னியது.
அதற்கான பதிலை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
”அதிமுகவில் எடப்பாடிக்கும், பன்னீருக்குமான அதிகார மோதல் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் நடந்துகொண்டிருக்கும் நிலையில், அரசியல் ரீதியாகவும் சில காய்நகர்த்தல்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு இரட்டைத் தலைமையை முடிவுக்குக் கொண்டு வந்து ஒற்றைத் தலைமையை அதுவும் தன் தலைமையை அதிமுகவில் ஏற்படுத்த தீவிரமானார் எடப்பாடி பழனிசாமி. கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக் குழு கூடியது, பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸை அவமதிப்பு செய்து அனுப்பினார்கள். அதன் பிறகு தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவைக் கூட்டினார் எடப்பாடி.
அதற்கு தடை கேட்டு நீதிமன்றம் சென்றார் ஒபிஎஸ். நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. பன்னீரின் சட்டப் போராட்டம் தொடர்கிறது. பொதுக்குழுவைக் கூட்டிய எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளரானார். ஜெ வகித்த நிரந்தர பொதுச்செயலாளர் பதவியையும் நீக்கி, ஒபிஎஸ் வகித்துவந்த ஒருங்கிணைப்பாளர் பதவியையும் பறித்து கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கினார்.

இந்த நிலையில் பாஜகவின் ஆதரவைப் பெற இருவரும் போராடி வருகிறார்கள். பாஜக ஆதரவு தனக்கு இருப்பதாகச் சொல்லி எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு மூலமாக பல வழிகளில் நெருக்கடிகளை உருவாக்கிட மும்முரமாக இருக்கிறார் ஓபிஎஸ். இந்த அடிப்படையில்தான் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் கை கோர்த்துள்ளார் பன்னீர். ‘விரைவில் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அப்போது சசிகலாவை சந்தித்து கட்சியை அவரிடம் ஒப்படைப்பேன். எடப்பாடி பறித்துச் சென்ற அதிமுகவை மீட்டு சசிகலாவிடம் கொடுப்பேன்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசி வருகிறார் பன்னீர். சசிகலாவும் முன்பை விட நம்பிக்கையாகவும் உற்சாகமாகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் டிடிவி தினகரன், ’அதிமுகவின் உண்மையான பெருவாரியான தொண்டர்கள் தன் பக்கம்தான் இருக்கிறார்கள்’ என்பதை பாஜக தலைவர்களுக்கு உணர்த்தும் வகையில், சுதந்திர தின விழாவான ஆகஸ்ட் 15 திங்கள் கிழமை அதிமுக பொதுக்குழு கூட்டிய அதே ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில், இராகுகாலம் முடிந்து காலை 9.00 மணிக்கு அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டுகிறார். செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் மற்றும் சிறப்பு பார்வையாளர்கள் என சுமார் 2500 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தலைமையிலிருந்து மாவட்ட மாநில நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, ’கூட்டத்தை அதிகமாக அழைத்து வாருங்கள். எடப்பாடி நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டத்தைவிட அதிகமாக காட்டவேண்டும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இருந்து கணிசமான கூட்டத்தை கூட்டி வரவேண்டும்’ என்று கட்டளையிட்டிருக்கிறார்கள். சமீபத்தில் மாவட்டம் மாவட்டமாக சென்றுவரும் டிடிவி, ’பொதுக்குழுவுக்குப் பிறகு இனி வரும் காலம் நமக்கு வசந்த காலம்’ என்று உற்சாகமாக நிர்வாகிகளிடம் சொல்லி வருகிறார்.
நிர்வாகிகளை எடப்பாடி எப்படி கையிலெடுத்தாரோ அதே ரூட்டில் சசிகலாவும் கையிலெடுக்கத் தீர்மானித்துவிட்டார். பாஜகவின் ஒருங்கிணைப்பில் சசிகலா பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஒபிஎஸ், வட மாவட்டத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு நல்ல பதவி கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பான பதவிகள் வழங்க அனைத்து விதமான மாஸ்டர் பிளானும் போட்டு காய் நகர்த்தி வருகிறார்கள் சசிகலாவும் ஒபிஎஸூம் என்கிறார்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள்’ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தங்கர்: ராஜஸ்தான் தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுக்குமா?