அதிமுகவில், என்னை சேர்க்க வேண்டும் என்பதற்காக யாரும் சிபாரிசு செய்ய வேண்டியதில்லை என்று அதிமுக அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பாவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (பிப்ரவரி 17) பதிலளித்துள்ளார். OPS replies Rajan Sellappa
அண்மையில் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசியபோது, “அதிமுகவில் இணைய விரும்பினால் ஓ.பன்னீர் செல்வம் ஆறு மாத காலம் அமைதியாக இருக்க வேண்டும். அவரை கட்சியில் இணைப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ராஜன் செல்லப்பா பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம்,”அதிமுகவில் என்னுடைய விசுவாசத்திற்கு ஜெயலலிதா நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். கட்சி நலன் கருதி தான் பிரிந்து கிடக்கின்ற அதிமுகவினர் அனைவரும் இணைய வேண்டும் என்று சொன்னேன்.
என்னை அழைத்துக்கொண்டுபோய் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று சிபாரிசு செய்ய இதுவரை நான் யாரிடமும் சொன்னதே கிடையாது, சொல்லவும் மாட்டேன். ராஜன் செல்லப்பா அண்ணன் அதை புரிந்து கொள்ள வேண்டும். எனக்காக யாரும் பரிந்து பேச வேண்டிய தேவையில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி உறுதியாக தமிழகம் முழுவதும் சென்று வாக்காளர்களை சந்திப்பேன். அதிமுக பிரிந்ததால் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை தலைமை அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை தழுவியது. எனவே, திமுகவை எதிர்த்து நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றியணைய வேண்டும்” என்றார்.
“அதிமுக தலைவர்கள் படத்தை பயன்படுத்தாததால், எடப்பாடி பழனிசாமியின் பாராட்டு விழாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்திருப்பது” பற்றிய கேள்விக்கு, “23 ஆண்டுகளாக செங்கோட்டையன் மாவட்ட செயலாளராக இருந்திருக்கிறார். 9 முறை தேர்தலில் நின்று 7 முறை வெற்றி பெற்றுள்ளார்.
ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரிட்சயமானவர். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் தனது பணியை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார். அதிமுகவை வளர்த்த ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் படங்களை புறக்கணித்துள்ளதால் அவர் தனது மனத்தாங்கலை வெளிப்படுத்தியுள்ளார்” என்று பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். OPS replies Rajan Sellappa