பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை கேட்டு ஓபிஎஸ் மனு!

Published On:

| By Kavi

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க கேட்டு ஏற்கனவே 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 20) ஓபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

வரும் மார்ச் 26ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியே மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நேற்று (மார்ச் 19) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, பொதுச்செயலாளர் தேர்தலைத் தொடர அனுமதி வழங்கி, தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

மேலும் ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இடைக்கால நிவாரணம் கேட்டுத் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை வரும் 22ஆம் தேதி நடைபெறும் என்று கூறினார்.

இந்தச்சூழலில் ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 20) தனியே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடைவிதிக்கக் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் தாக்கல் செய்த மனுவில், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானதாக நீதிமன்றம் கூறவில்லை. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானதா? இல்லையா? என தெரியவரும். எனவே பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

இந்த மனு, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களோடு வரும் 22ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரியா

பட்ஜெட்: குடிமைப் பணி தேர்வு… ஆண்டுக்கு 1000 மாணவர்கள்

தமிழக பட்ஜெட்: “வெளிச்சம் தராத மின்மினிப் பூச்சி”: எடப்பாடி விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel