தமிழ்நாடு சட்டமன்றம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி கூடுகிற நிலையில்…அதிமுக சட்டமன்றக் குழு நிர்வாகிகள் இன்று (செப்டம்பர் 22) சபாநாயகர் அப்பாவுவை அவரது அறையில் சந்தித்தனர்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் அருகே அவருக்கு இடம் ஒதுக்குமாறு இன்று முறையிட்டுள்ளனர் அதிமுகவினர்.
முன்னதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சட்டமன்ற பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் இதற்குப் பிறகும் அண்மையில் நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அருகே ஓ.பன்னீர்செல்வம்தான் அமர்ந்திருந்தார். அருகருகே அமர்ந்திருந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
இந்த பின்னணியில் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்த பிறகு தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
அப்போது அவர், “எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமாரை தேர்ந்தெடுத்து அது தொடர்பாக சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் கொடுத்திருக்கிறோம்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்குரிய இருக்கையை ஒதுக்குமாறு இரு முறை சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தும் அவர் பரிசீலனையில் இருப்பதாக சொல்லியிருந்தார்.
அடுத்த மாதம் சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவரான உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகே இடம் ஒதுக்கக் கோரி மீண்டும் இன்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம்.
எங்களுக்கு வழங்க வேண்டிய இடத்தை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம்.
கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பக்கத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இன்றைய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் அமர்ந்திருந்தார்.
அதற்கும் முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அமர்ந்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக இப்போது எடப்பாடி பழனிசாமி இருக்கிற நிலையில் எங்கள் கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உதயகுமாருக்கு அவர் அருகே இடம் அளிப்பதுதானே முறை.
இதுதான் சட்டமன்ற மரபு, விதி. நீங்கள் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்குரிய இடத்தை வழங்குகிறீர்களா இல்லையா என்று கடிதம் மூலம் சபாநாயகரிடம் கேட்டிருக்கிறோம்.
சபாநாயகரது முடிவை கடிதம் மூலம் வழங்குமாறு கேட்டுள்ளோம். சபாநாயகர் பதில் கடிதத்துக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வார்” என்று கூறினார் செங்கோட்டையன்.
–வேந்தன்
காலில் விழுந்த வானதி: மோடி சொன்ன அட்வைஸ்!
ஓபிசி மக்களுக்காக மோடி என்ன செய்தார்? ராகுல் கேள்வி!