தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதா? – ஓபிஎஸ் காட்டம்!
ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் தலைமை செயலகம் அமைக்கும் முடிவினை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் தலைமை செயலகத்தில் கடும் நெருக்கடி நிலவுவதால் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கட்டிடத்திற்கு தலைமை செயலகத்தை மாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் கடிதம் அனுப்பியது.
இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 18) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் கூடிய தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையையும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.
இந்த மருத்துவமனை பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடனும், வரவேற்புடனும் கடந்த பத்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் லட்சக்கணக்கான ஏழையெளிய மக்கள் உயர்தர சிகிச்சையினை பெற்று வருகின்றனர்.
இந்த் சூழ்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் தனது அறிக்கை மூலம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
அதில் தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி உள்ளதாகவும், கட்டடத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவித்து தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் வளாகத்திற்கு இடம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை விடப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில் உணவுத் துறை செயலர் அறையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதாகவும், கோப்புகள் நனைந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
இதுபோன்ற அறிவிப்பினை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வெளியிடுவதையும், அரசு செயலர் அறையில் குடிநீர் குழாய் உடைந்து கோப்புகள் நனைந்ததாக செய்திகள் வருவதையும் பார்க்கும்போது, இதற்குப் பின்னணியில், திமுக அரசின் கைவண்ணம் உள்ளதோ, நாடகம் நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட பன்னோக்கு உயர் மருத்துவமனை என்ற ஒரே காரணத்திற்காக இதுபோன்ற நடவடிக்கையை திமுக அரசு எடுக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அங்கிருந்து மாற்ற முயற்சிக்கும் திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது.
ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அங்கிருந்து கிண்டி கிங் ஆய்வக வளாகத்திற்கு மாற்றிவிட்டு ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் தலைமைச் செயலகத்தினை அமைக்கும் முயற்சியினை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்றும், தலைமைச் செயலகத்தை மாற்ற வேண்டுமென்று நினைத்தால் அதற்கென தனி இடத்தை தெரிவு செய்து அங்கு கட்டடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முதல்வர் ஸ்டாலினை அதிமுக சார்பில் வலியறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
நெல்லை மேயரை மாற்ற ஸ்டாலினுக்கு கடிதம்!
“கலைஞர் நூலகம் அறிவின் கடலாக திகழ்கிறது” – கி.வீரமணி