தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (அக்டோபர் 17) அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களோடு கலந்துகொண்டார்.
கலந்துகொண்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவது குறித்தும், அதில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் சட்டப்பேரவைத் தலைவர் தெரிவித்திருந்தார்.
அந்த அடிப்படையில் அதிமுக சார்பாக எங்களுடைய ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதற்காக கூட்டத்தில் கலந்துகொண்டோம்” என்றார். .
“உங்கள் அருகில் உட்காருவதற்கு எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்று கூறப்படுகிறதே?” என்று கேள்வி எழுப்பியபோது, “எங்கள் விருப்பப்படி சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறோம். அவர்கள் விருப்பத்தை அவர்களிடம் தான் கேட்கவேண்டும்” என்று பதிலளித்தார்.
அதிமுக 51 ஆவது ஆண்டுவிழா தொடங்கும் இந்த நேரத்தில் கட்சி இப்படி இரண்டாக பிரிந்து கிடக்கிறதே என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம்,
“எம்.ஜி.ஆர் தொண்டர்களால், தொண்டர்களுக்கான இயக்கத்தை உருவாக்கினார். பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். அதன்பிறகு ஜெயலலிதா கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டு காலம் மிகப்பெரிய வலுவினையும், தமிழக மக்களிடம் அன்பையும், மதிப்பையும் பெற்று 16 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை வழங்கினார்.
இந்தியாவில் இருக்கும் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றி, சிறந்த முதலமைச்சராக இருந்தார். இந்த இரண்டு தலைவர்களும் அதிமுகவிற்கு செய்த தியாகங்கள், இந்த இயக்கம் உருவான காலத்தில் இருந்து அடிப்படைத் தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இந்த இயக்கம், எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டம் அதை கட்டி காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் தான் நின்றுகொண்டிருக்கிறோம்.
எங்களுக்கு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து பொதுமக்களும் ஆதரவைத் தந்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு சாதாரண தொண்டன் கூட தலைமை பொறுப்பில் வரமுடியும் என்ற சட்டவிதியை வகுத்து கொடுத்திருக்கின்றனர். தற்போது மாற்றப்பட்டுள்ள கட்சி விதிகள் அபாயகரமானவை.
தலைமைப் பொறுப்பிற்கு வருபவரை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழியவேண்டும், அந்தப் பொறுப்பில் வரக்கூடியவர் 5 ஆண்டுகாலம் தலைமைக்கழகத்தில் நிர்வாகியாக பணியாற்றவேண்டும் என்ற எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணத்திற்கு மாறுபட்டு கழக விதிகள் மாற்றப்படுவதால் ஜனநாயக ரீதியில் எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறோம்” என்றார்.
கலை.ரா