தேவர் குருபூஜை : 500 கார்கள் ரெடி – மாஸ்காட்ட தயாராகும் ஓபிஎஸ்

அரசியல்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆவது ஜெயந்தி விழாவும் 60ஆவது குருபூஜை விழாவும் நாளை (அக்டோபர் 30) நடைபெற இருக்கிறது.

இதனால் தேவரின் சொந்த ஊரான பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, ஒரு ஐஜி, 4 டிஐஜி-க்கள் 34 எஸ்.பிக்கள் உட்பட 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் 94 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் இந்த ஆண்டு ஹை ரிசொல்யூசன் கொண்ட ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

ஒரு பக்கம் தேவர் ஜெயந்திக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட இன்னொரு பக்கம் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தங்களுடைய அரசியலை பலப்படுத்திக் கொள்வதற்கான வேலையில் இறங்கி உள்ளனர்.

தேவருடைய தங்கக் கவசத்தை கைப்பற்றி அதிமுகவில் தங்களுடைய ஆதிக்கத்தை நிரூபிக்க ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு எடுத்த பல பகீரத முயற்சிகளை உயர் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பின் மூலமாக தவிடுபொடியாக்கிவிட்டது.

அக்டோபர் 26-ம் தேதி அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தங்கக் கவசத்தை டி.ஆர்.ஓ.விடம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

இதனால், ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணிகளுக்குமே தங்கக் கவசம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் தேவர் குருபூஜைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை என்று கட்சி தலைமை அறிவித்தது.

ஏற்கனவே அதிமுக கொங்கு மண்டல கட்சியாக மாறி வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிற நிலையில் எடப்பாடியின் இந்த முடிவு முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

OPS goes to devar guru pujai with 500 cars

முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் ஓபிஎஸ்-க்கு இருக்கக் கூடிய செல்வாக்கை குறைக்கத்தான் அதே சமூகத்தை சேர்ந்த ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமித்து எடப்பாடி அறிவித்தாகவும் கூறப்பட்டது.

இதே திட்டத்தின் படிதான் தேவர் குருபூஜைக்காக 28-ம் தேதியே ஆர்.பி. உதயகுமாரை அனுப்பி வைத்தார் எடப்பாடி. ஆனால், தேவர் நினைவிடத்தில் எடப்பாடிக்கு ஆதரவான முழக்கங்களை கேட்டு முக்குலத்தோர் சமூகத்தினர் சிலர் கொந்தளித்ததாக வீடியோக்களும் செய்திகளும் வெளியாகின.

இந்த சம்பவங்களை கேள்விபட்ட ஓபிஎஸ் தரப்பினர் மிகவும் குஷியுடன் தேவர் குருபூஜை வேற லெவலில் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வம் மாநிலங்களவை எம்.பி. தர்மர் மூலமாக இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்துள்ளார்.

இது தொடர்பாக நேற்றே அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ் தன்னுடன் யார் யாரெல்லாம் பசும்பொன்னுக்கு வர உள்ளனர் என்கிற பட்டியலையும் வெளியிட்டு இருந்தார்.

அதில் தேனி எம்.பி. ராவீந்திரநாத், முன்னாள் அமைச்சர்கள் ஆர். வைத்திலிங்கம், கு.ப. கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்பட 11 பெயர்கள் இடம் பெற்று இருந்தன.

இது மட்டும் இல்லாமல் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என ஓபிஎஸ் தன்னுடைய அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்படாத மேலும் பல ஏற்பாடுகளையும் ஓபிஎஸ் தரப்பினர் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

30-ம் தேதி அன்று காலை 11.30 மணிக்கு சுமார் 500 கார்களில் பெரும்படையுடன் பசும்பொன்னில் கால் பதிக்க ஓபிஎஸ் தயாராகி வருகிறார்.

தேவர் குருபூஜையை ஒட்டி பசும்பொன்னுக்குள் வாடகை கார்களுக்கு அனுமதி இல்லாததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களுடைய சொந்த கார்களில் வர முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக யார் யாருடைய கார்கள் இதில் கலந்துகொள்ள உள்ளன என்கிற ஒருங்கிணைப்பு பணியை ஓபிஎஸ் அணியினர் மேற்கொண்டு உள்ளனர்.

இதே போல சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

இபிஎஸ் சென்னையில் இருக்கக் கூடிய தேவர் சிலைக்கு மரியாதை செய்ய முடிவு செய்துள்ள நிலையில், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் தங்களது அரசியலை பலப்படுத்திக்கொள்ள பசும்பொன் பயணத்தை பயன்படுத்திக்கொள்ள உள்ளனர்.

அப்துல் ராஃபிக்

நகர, மாநகர சபைக் கூட்டம்: மநீம பாராட்டு!

கோவை சம்பவம் : திருவாரூரில் செல்போன்கள் பறிமுதல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.