அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனு இன்று (மார்ச் 3) விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிடக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டது.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சிவில் நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கானது நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
செல்வம்