அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேரை நீக்குவதாக நேற்று (ஜூலை 14) ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று பொள்ளாச்சி வி.ஜெயராமன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட மேலும் 44 நிர்வாகிகளை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
அதிமுக தலைமை பதவிக்காக தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ், இபிஎஸ் என இருதரப்பும் நாடி உள்ளது. இதற்கிடையே இருதரப்பும் தொடர்ந்து பதவி நீக்க அறிவிப்பினை வெளியிட்டு வருகின்றனர். கடந்த 11-ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு கட்சியில் இருந்து நீக்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஓபிஎஸ் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் நீக்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இபிஎஸ், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தொடர்ந்து 2வது நாளாக இன்று பொள்ளாச்சி வி. ஜெயராமன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட மேலும் 44 நிர்வாகிகளை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சி கொள்கை, குறிக்கோள்களுக்கும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, பவுன்ராஜ், காமராஜ், ரமணா, அப்பு, வேலழகன், ரவி, தூசி கே மோகன், எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, பாண்டியன், அருண்மொழித்தேவன், குமரகுரு, அசோக்குமார், கே.பி. அன்பழகன், வெங்கடாஜலம், இராமலிங்கம், கருப்பணன், மகேந்திரன், அர்ச்சுணன், அருண்குமார், வினோத், பரஞ்ஜோதி, குமார், வைரமுத்து, செந்தில்நாதன், முனியசாமி, கணேசராஜா, செல்வ மோகன்தாஸ் பாண்டியன், சண்முக நாதன், ஜாண் தங்கம், அன்பழகன் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நீக்கம் குறித்த அறிவிப்பு 2வது நாளாக அறிவிப்பு வரும் நிலையில், புதிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து இன்றோ நாளையோ அறிவிக்கப்படுவார்கள் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா