மின்னம்பலத்தின் அடையாளங்களில் ஒன்றான டிஜிட்டல் திண்ணை என்னாச்சு என்று பல்வேறு வாசகர்களின் கேள்விகளும், கோரிக்கைகளும் அலைபேசி அழைப்புகள், வாட்ஸ் அப் மெசேஜ், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மெசெஞ்சர் என பல வடிவங்களிலும் வந்து திக்குமுக்காட வைத்தது. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு டிஜிட்டல் திண்ணை இதோ தொடர்கிறது
அலுவலகம் வந்ததும் வைஃபை தானாகவே மொபைலில் கனெக்ட் ஆனது. இன்ஸ்டாகிராம், “எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செலக்ட் செய்யப்பட்டிருக்கிறாரே?” என்ற கேள்வியை அனுப்பியது.
அதற்கான பதிலை வாட்ஸ் அப் டைப் செய்யத் தொடங்கியது.
“ஜூலை 17 ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள ஹோட்டலில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டினார் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் நயினார் நாகேந்திரனும் கலந்துகொண்டது அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது பற்றி அவர்கள் கொஞ்ச நேரம் விளக்கிவிட்டு சென்றுவிட்டனர். அதன் பின்னர் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் இடத்தில் அடுத்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி யாருக்கு என்ற சப்ஜெக்ட் விவாதிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி, ‘எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு தகுதியான ஒருவரைதான் நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம். அவர் யாராக இருந்தாலும் உங்கள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். சட்டமன்றத்தில் திமுக அரசை வலிமையுடன் எதிர்ப்பதற்கான படையாக அதிமுகவை நாம் உருவாக்குவோம்’ என்று பேசினார். அந்த கூட்டத்தில், ’எதிர்க்கட்சித் துணைத் தலைவரை நியமிப்பதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது’ என்று வேலுமணி., தங்கமணி போன்றோரும் பேசினார்கள். அந்த கூட்டத்தில் இன்னார்தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்று முடிவெடுக்கப்படவில்லை. ஆனால் சீனியர்களான நத்தம் விசுவநாதன், ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரது பெயர்கள்தான் இறுதிகட்ட பரிசீலனை வரை சென்றன.
இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முடிந்ததும் அன்றே எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் எடப்பாடியோடு வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன்., நத்தம் விசுவநாதன், உதயகுமார், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில்தான் யார் எதிர்கட்சித் துணைத் தலைவர் என்ற விவாதம் நடைபெற்றது. ஓ.பன்னீர் செல்வம் முக்குலத்தோர் இனத்தில் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். புதிதாக நியமிக்கப்பட இருக்கும் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்குலத்தோரில் இருக்கும் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கே வழங்கலாம் என்று வேலுமணியும் தங்கமணியும் பேசியிருக்கிறார்கள். அப்போதே நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் , மணியன் ஆகியோர் முகம் லேசாக வாடியது.
இதையடுத்து மறுநாள் 18 ஆம் தேதியும் எடப்பாடியின் வீட்டில் முக்கிய ஆலோசனைகள் தொடர்ந்தன. அதற்கு முன்பே சிலரை தனித்தனியாக சந்தித்தார் எடப்பாடி. அந்த சந்திப்புகளில் சில முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. ‘நத்தம் விசுவநாதன் சீனியர்தான். ஜெயலலிதா காலத்திலேயே கட்சியின் ஐவர் குழுவில் முக்கியமானவராக இருந்தவர். அப்போதே பன்னீருக்கு மிகவும் நெருக்கமானவர். பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்தை மிகக் கடுமையாக தாக்கினார் நத்தம். ஆனாலும் சட்டமன்றத்திலும், தென் மாவட்டங்களிலும் அவர் ஆக்டிவ்வாக செயல்படுவாரா என்பது கேள்விதான். இன்னும் முக்கியமான விஷயம் சசிகலாவுடன் நத்தம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இன்னமும் தொடர்பில்தான் இருக்கிறார்கள். தவிர அவர் முக்குலத்தோரில் சேர்வை அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த ஐந்தாண்டு காலமாக அவர் அமைச்சர் பதவியில் இல்லை. அதனால், அவரால் அடுத்த தேர்தல் வரை கட்சியில் செலவு செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்’ என்றெல்லாம் பேசப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் ஆர்.பி. உதயகுமார் தனியாக சென்று எடப்பாடியை சந்தித்துள்ளார்.
‘அண்ணே… எனக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியைக் கொடுத்தீர்கள் என்றால் உங்கள் மனசாட்சியாக தென் மாவட்டத்தில் கட்சியை வளர்க்கிறேன். செலவு செய்கிறேன். இளைஞர்களை அதிமுக பக்கம் கொண்டு வருகிறேன்’ என்று வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்,. ஏற்கனவே வேலுமணியும், தங்கமணியும் மறவர் பன்னீர் செல்வத்துக்கு பதிலாக ஒரு மறவரையே எதிர்கட்சித் துணைத் தலைவராக கொண்டுவந்துவிடலாம் என்று எடப்பாடியிடம் தெரிவித்திருந்தனர். இந்த எல்லா காரணங்களும் சேர்ந்துதான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு ஆர்.பி. உதயகுமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஜூலை 11 பொதுக்குழுக் கூட்டத்திலேயே பன்னீருக்கு எதிரான எல்லா அஸ்திரங்களையும் அவர் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினரை வைத்தே ஏவினார் எடப்பாடி. முதல் எட்டு தீர்மானங்களை வாசித்தவர் உதயகுமார். அடுத்த எட்டு தீர்மானங்களை வாசித்தவர் ஓ.எஸ். மணியன். பொருளாளர் பதவியில் இருந்த பன்னீர் செல்வத்துக்கு பதிலாக வரவு செலவு அறிக்கையை வாசித்தவர் புதுக்கோட்டை விஜயபாஸ்கர். பன்னீரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை கொண்டுவந்தவர் நத்தம் விசுவநாதன். இப்படி எல்லா காய்களையும் முக்குலத்தோர் இனத்தை வைத்தே நகர்த்தினார் எடப்பாடி. இதையடுத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தேர்விலும் முக்குலத்தோருக்குள்ளேயே சில காய்களை நகர்த்தி உதயகுமாரை கொண்டுவந்திருக்கிறார்.
2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் அதிமுகவை நடத்திய ஐவரணியில் நத்தம் விசுவநாதன் முக்கியமானவர்.அப்போது நத்தத்தின் முன் கை கட்டி வாய் பொத்தி நின்று வளர்ந்தவர் உதயகுமார். மெல்ல மெல்ல பன்னீரிடம் நத்தம் சிபாரிசு செய்ததன் காரணமாக 2011இல் தேர்தலில் சீட் வாங்கி, நத்தம் மீதான ஜெ.வின் அதிருப்தி காரணமாக அமைச்சர் பதவியும் பெற்று சசிகலாவை பிடித்து மளமளவென வளர்ந்தார். முதலில் தன் வளர்ச்சிக்குக் காரணமான பன்னீருக்கு எதிராக காய் நகர்த்திய உதயகுமார், இன்றைக்கு தன் வளர்ச்சியில் அடுத்த முக்கிய பங்கு வகித்த நத்தம் விசுநாதனுக்கே செக் வைக்கும் அளவுக்கு கை தேர்ந்தவராகிவிட்டார்”: என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.