அதிமுக வில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று (டிசம்பர் 21) ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார்.
இதனை முன்னிட்டு நேற்று இரவு, சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்துக்குச் சென்ற ஓபிஎஸ் அவருடன் ஆலோசனை நடத்தினர்.
இன்று நடைபெறும் மா.செ. க்கள் கூட்டம் பற்றியும், கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் பற்றியும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதனிடையே ஓபிஎஸின் அறிவிப்பைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலிருந்தும் அவரது ஆதரவாளர்கள் அதிகாலை ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்துக்குச் சென்ற வண்ணம் இருந்தனர்.
முன்னதாக ஜூலை 11 அன்று எடப்பாடி பொதுக்குழுக் கூட்டத்தின் போது வழிநெடுக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது போல, ஓபிஎஸ் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த கூட்டத்துக்கும் பேனர்கள் சாலையின் இரு புறங்களிலும் வைக்கப்பட்டிருந்தன.
மா.செ. க்கள் கூட்டத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 21) காலை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்த புறப்பட்டார் பன்னீர் செல்வம்.
அப்போது இன்று என்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்போகிறீர்கள் என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, “கூட்டம் முடிந்ததும் பேசுகிறேன்” என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
திருமண மண்டபத்துக்குள் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.பி. மைத்ரேயன், “இன்றைய கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று அறிகிறேன். அது நிச்சயமாக அதிமுக வின் வருங்காலத்துக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று கருதுகிறேன்” என்று கூறினார்.
இந்த சூழலில் புதிதாக நியமிக்கப்பட்ட மா.செ. க்கள் மண்டபத்துக்குள் காத்திருந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்தார்.
அவருக்கு மேள தாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து பூங்கொத்து கொடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கூட்ட மேடைக்கு வந்த ஓ.பன்னீர் செல்வம், அங்கிருந்த ஜெயலலிதா புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தற்போது கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்பின் ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று கூடியுள்ள மா.செ. க்கள் கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை நிர்வாகிகள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பிரியா
பதவி விலகத் தயார்: எலான் மஸ்க் போட்ட கன்டிஷன்!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது!