ஓபிஎஸ் கூட்டியுள்ள கூட்டம் அதிமுக கூட்டம் கிடையாது, அது தனியார் நிறுவன கூட்டமாகத்தான் பார்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இன்று (டிசம்பர் 21) ஓபிஎஸ் மா.செ.க்கள் கூட்டத்தை நடத்தி வருகிறார்.
இதில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
“உண்மையான அதிமுக நாங்கள் தான். எடப்பாடி மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்த்துக்கொள்வோம்” என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், “பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு சீனியர் மேன். அவர் மீது எனக்கு மிகவும் மரியாதை இருக்கிறது. இன்று நாங்கள் ஒன்றியம் தொடங்கி மாநகராட்சி வரை ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
ஆனால் அவர்கள் ஏதாவது இதுபோன்று செய்திருக்கிறார்களா? ஏனென்றால் அவர்களிடம் ஆட்கள் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் மீது ஒரு நல்ல எண்ணம் இருக்கிறது. அதை அவர் கெடுத்துக்கொள்ள வேண்டாம். ஓபிஎஸ் உடனான நட்பை பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்ப்பது நல்லது” என குறிப்பிட்டார்.
அதுபோன்று ஓ.பன்னீர் செல்வம் கூட்டியிருப்பது அதிமுக கூட்டம் அல்ல. ஓபிஎஸ் பிரைவேட் லிமிட்டெட் கூட்டமாகத்தான் பார்க்க முடியும் என்று விமர்சித்தார்.
பிரியா
அன்று தமிழாசிரியர்- இன்று தமிழ்ச்செம்மல்! – புலவர் சண்முகவடிவேலுவின் நகைச்சுவைப் பயணம்!