சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ. பன்னீர்செல்வம் செல்லவிருப்பதால் பாதுகாப்பு கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவிலிருந்து அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என்று இரு அணிகளாக பகிரங்கமாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.
பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மாறிமாறி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். பொதுக்குழுவின் போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் கலவரத்தின் காரணமாகச் சீல் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுக அலுவலகம் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு சீல் அகற்றப்பட்டு அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 8) 75 நாட்கள் கழித்து எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி “ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்க முடியாது.
உயர்ந்த பதவியிலிருந்த அவர் கொள்ளைக் கூட்டத்தின் தலைவரைப் போல் செயல்பட்டார். இப்படிப்பட்டவர்களைத் தொண்டர்கள் எப்படி மன்னிப்பார்கள், எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.
திமுகவிற்குப் பினாமியாக இருந்து கொண்டு அதிமுகவை உடைக்க வேண்டும் என்றும் எங்களைப் பற்றி அவதூறாகச் செய்தி வர வேண்டும் என்று செயல்படுகிறார்” என்று கூறினார்.
இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வமும் அதிமுக அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.சி.டி. பிரபாகரன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் 2021 தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் தலைமையில் அதிமுக மக்கள் பணியையும் அரசியல் பணியையும் செய்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சில நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் கட்சி அலுவலகத்துக்கு வந்தபோது பாதுகாப்பு குறைபாடு காரணமாக அங்குக் குவிக்கப்பட்டிருந்த ரவுடிகள் மற்றும் குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் வருவாய்த்துறை கட்சி அலுவலகத்திற்குச் சீல் வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் நீதிபதி அலுவலகத்துக்குச் சீல் வைத்ததை ரத்து செய்து பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார். பொதுக்குழு தொடர்பாக வழக்குகள் இன்னும் நிலுவையிலிருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஒருங்கிணைப்பாளர் தலைமை அலுவலகம் சென்று பணியாற்றிட எந்த தடையும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் தலைமை அலுவலகம் செல்லும் போது அவரை வரவேற்க அதிகப்படியான தொண்டர்கள் கூடுவார்கள்.
இதனைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கலவரம் செய்யத் திட்டம் தீட்டியுள்ளனர்.
எனவே ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் தலைமை அலுவலகம் செல்லும் போது தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது” என்று ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
இதனால் மீண்டும் அதிமுக தலைமை அலுவலகத்தை மையமாக வைத்து பரபரப்பு பற்றிக் கொண்டிருக்கிறது.
மோனிஷா
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் விற்பனைக்கு அல்ல: தீபா