45 விழுக்காடாக இருந்த அதிமுகவின் வாக்குவங்கி 20 விழுக்காடாக குறைந்தது ஏன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் 53 வது தொடக்க விழாவை ஒட்டி, அக்கட்சி பொதுச்செயலாளர் கட்சித்தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் “எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026-ல் அதிமுகவின் ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது. அதற்கு, எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று(அக்டோபர் 18) எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, அதர்மங்கள் அதிகரித்து துரோகச் செயல்கள் தாண்டவமாடி, கட்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.
அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோகக் கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது.
ஏழு மக்களவைத் தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, 12 தொகுதிகளில் மூன்றாவது இடம், கன்னியாகுமரியில் நான்காவது இடம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்காவது இடம் என படுதோல்வியை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சந்தித்தது.
இதன்மூலம், முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்தவர், முதலமைச்சர் பதவியில் அமர்த்தியவர், முதலமைச்சர் பதவியில் தொடர துணை புரிந்தவர்கள் என அனைவரையும் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது.
இந்தத் துரோகச் செயல் காரணமாக, ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் 45 விழுக்காடாக இருந்த வாக்கு வங்கி இன்று 20 விழுக்காடாக குறைந்துவிட்டது. இப்படிப்பட்ட “துரோகம்” தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஒதுவதுபோல் உள்ளது.
இந்த நிலைமை நீடித்தால், எத்தனை ஆண்டுகளானாலும் அ.தி.மு.க ஆட்சி அமைக்க முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே செல்லும்.
வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகிவிடும். “தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன்தெரி வார்.” அதாவது, தனக்கு செய்யப்பட்ட உதவி தினை அளவே ஆனாலும், பண்புள்ளவர்கள் அதைப் பனை அளவுக்குக் கருதிக் கொள்வார்கள் என்கிறது திருக்குறள்.
அ.தி.மு.க வீறுகொண்டு எழ வேண்டுமென்றால், பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டுமென்றால் பண்புள்ளவர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும். இந்தத் தருணத்தில், “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மதற்கு” என்ற வள்ளுவரின் வாய்மொழியினைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அதாவது, எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய் நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.
எனவே, “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க மக்களுக்காகவே இயங்கும்” என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றிட 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து களப் பணியாற்றி அ.தி.மு.க ஆட்சியில் அமர வைக்க உறுதி ஏற்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக இரண்டாக பிரிந்துவிட்டது என தயவு செய்து இனி பேசாதீர்கள். எங்கள் தரப்பு தான் அதிமுக. அவர்கள் பிரிந்து சென்றவர்கள் அல்ல அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–அப்துல் ரஹ்மான்
வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
மதி சந்தை முதல் மதி எக்ஸ்பிரஸ் வரை… மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்!
ஹெல்த் டிப்ஸ்: குதிகால் வலிக்குத் தீர்வு தரும் ‘ஷாக் வேவ்’ சிகிச்சை!