திருச்சி மாநாட்டுக்கு ஓபிஎஸ் அணியினர் தயாராகி வரும் நிலையில், விழாவுக்கான மேடை அதிமுக அலுவலகம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து, இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் தரப்புக்கே தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இந்த சூழலில் நீதிமன்ற படி ஏறி ஏறி கால்கள் அசந்து விட்டன, இனி மக்கள் மன்றம் தான் எனக் கூறி திருச்சியில் மாநாட்டுக்கு ஓபிஎஸ் தரப்பு ஏற்பாடு செய்து வருகிறது.
எம்ஜிஆர் பிறந்த நாள், ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் கழகத்தின் பொன்விழா என முப்பெரும் விழாவாக திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நாளை 5 மணிக்கு விழா நடைபெறும் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
விழா நடைபெறுவதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் இதற்கு தேவையான வேலைகளை ஓபிஎஸ் தரப்பினர் செய்து வருகின்றனர். குறிப்பாக மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், அதிமுக தலைமை அலுவலகம் வடிவில் மாநாட்டு மேடையை அமைத்துள்ளனர். அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிமுக கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் விழா மேடையையே அதிமுக அலுவலகம் போல் அமைத்து இருப்பது இபிஎஸ் தரப்பை மேலும் டென்ஷன் ஆக்கியுள்ளது.
இதுமட்டுமின்றி நாளைய முதல்வரே என ஓபிஎஸை குறிப்பிடும் வகையிலான பேனர்களை திருச்சியில் காண முடிகிறது.
பிரியா