சொத்துக்குவிப்பு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆளும்கட்சி விருப்பப்படி செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 2012-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யாததால் எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஆகஸ்ட் 31) விசாரணைக்கு வந்தபோது, “ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆட்சி மாறிய பின்பு ஒரு நிலைப்பாடும் ஆட்சிக்கு முன்பு ஒரு நிலைப்பாடும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆளுங்கட்சி விருப்பப்படி நிறம்மாறி செயல்படுகிறது. இதற்கு நீதிமன்றங்களே துணை போவது வேதனையாக உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அரசியலில் இருந்து விலகி செயல்பட வேண்டும். இதுபோன்ற தவறுகளை அனுமதித்தால் புற்றுநோய் போல இந்த சமூகம் சிதைந்துவிடும்.
எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஓபிஎஸ் மீது வழக்கு தொடர பெறப்பட்ட அனுமதியை ரத்து செய்ய சபாநாயகருக்கு அனுமதியில்லை. அவரே நீதிபதி போல செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கில் செப்டம்பர் 27-ஆம் தேதிக்குள் ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்தினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ் வழக்கின் பின்னணி!
கடந்த 2001 -2006 அதிமுக ஆட்சிக்காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் ஓ.பன்னீர் செல்வம் இருந்தார். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர் செல்வம் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவிந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர் உள்ளிட்ட 7 பேர் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை திமுக ஆட்சியில் 2006-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தென் மாவட்டத்தில் ஊழல் வழக்குகளை விசாரிக்க மதுரை மாவட்டத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் தேனி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனுத்தாக்கல் செய்தார்.
அவரது மனுவை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. சம்மனை எதிர்த்தும் வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரியும் ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றியது. சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் 2012-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் மேற்கொண்டு வழக்கை நடத்த விரும்பவில்லை எனவும் புகாரை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் அறிவித்தது. இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் 7 பேரை 2012-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது.
இந்த வழக்கை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எம்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
செல்வம்
தினமலருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
நள்ளிரவில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை: நெல்லையில் பயங்கரம்!