பன்னீருக்கு கண்டனம்: தீர்ப்பில் நீதிபதி சொன்னது என்ன?

அரசியல்

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பன்னீர் செல்வத்துக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர் செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஜூலை 7,8 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பன்னீர் செல்வம் தரப்பிலும் விறுவிறுப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஜூலை 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி சரியாக 9 மணியளவில் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழுவுக்கு தடைகேட்ட மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

அந்த தீர்ப்பில், “சட்ட விதிகளின்படி பொதுக்குழுவை கூட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுக்குழு நடத்தவில்லை என்றால் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தான் பரிசீலிக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்றார்.

மேலும், “பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட மாட்டாது என்று ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என தெரியவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் தயங்கவில்லை. 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,190 பேர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் நடத்த ஜூன் 23ஆம் தேதியே அறிவிக்கப்பட்டதால், இதை 15 நாட்கள் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவே கருத முடியும். பெரும்பான்மையினரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.

கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நம்பிக்கையையோ ஆதரவையோ பெற இயலாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர், உறுப்பினர்களை சமாதானம் செய்து கட்சி நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் பொதுக்குழுவை அணுகுவதை விடுத்து ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடலாமா.

பொதுக்குழுவில் தீர்வு கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.

-பிரியா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.