ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியை கூட காரில் கட்டக் கூடாது என்று இன்று (ஏப்ரல் 20) பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பிறகு பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “தேர்தல் ஆணையத்தின் ஆணையின் படி அதிமுகவின் பெயரை, கட்சியை, இரட்டை இலை சின்னத்தை யாரும் உரிமை கோரவோ, பயன்படுத்தவோ முடியாது.
இனிமேல் அதிமுக என்றால் எடப்பாடியார் தான். எடப்பாடியார் என்றால் அதிமுக தான்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் வரவேற்க கூடிய ஒரு நல்ல முடிவு இன்று கிடைத்துள்ளது.
இதன் மூலம் இதுவரை இருந்த அனைத்து போராட்டமும் முடிந்து விட்டது. இனிமேல் அதிமுகவிற்கு எப்போதும் ஏறுமுகம் தான். இனிமேல் வெற்றி மேல் வெற்றிகள் எடப்பாடியாருக்கு குவியும்.
ஓபிஎஸ் தரப்பில் அதிமுகவின் கொடியை இனிமேல் பயன்படுத்தினால் நாங்கள் கிரிமினல் வழக்குப் பதிவு செய்வோம். பேரவையில் அதிமுகவின் பெயரை சொல்லி ஓ.பன்னீர்செல்வம் அமர முடியாது. அதிமுகவின் கொறடா சொன்னால் மட்டும் தான் அமர முடியும்.
இதுவரை கொஞ்சம் சுணக்கமாக இருந்தாலும் இனிமேல் வெற்றிப் பாதையில், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் எப்படி அதிமுக இருந்ததோ, அதுபோல் எடப்பாடியார் காலத்தில் பசுமையாக இருக்கும்.
நாளையில் இருந்து ஓபிஎஸ் அவரது காரில் அதிமுக கொடியைக் கட்டிக் கொண்டு வருவாரா என்று பாருங்கள். அப்படி கொடியை கட்டிக் கொண்டு வந்தால் சட்டம் தன் கடமையை செய்யும். ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்ல, யார் அதிமுக கொடியை பயன்படுத்தினாலும் வழக்கு தொடுப்போம்” என்று பேசினார்.
மோனிஷா
தமிழ்நாட்டுக்கே இன்று தீபாவளி தான்: எஸ்.பி.வேலுமணி
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி: செங்கோட்டையன்