மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர் சின்னம், கொடி, லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த மாட்டேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 30) உத்தரவாதம் அளித்துள்ளது. ops assured court not use aiadmk name flag symbol
“அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் போன்றவறை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.
இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அதிமுகவின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் போன்றவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ் குமார், அதிமுகவின் பெயர் சின்னம், கொடி, லெட்டர் பேட் போன்றவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை நவம்பர் 16-ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் நிலை என்ன?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, “மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வரும் வரை இந்த வழக்கை ஒத்திவைக்கலாம்” என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி,
“தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல் இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்து வாதத்தை தொடங்கலாம். இந்த வழக்கை ஒத்திவைப்பதாக இருந்தால் பன்னீர் செல்வத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், “வழக்கில் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த மாட்டோம்” என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு நீதிபதி என்.சதீஷ் குமார் ஒத்திவைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!
ops assured court not use aiadmk name flag symbol