அதிமுக வழக்கு: பன்னீர்செல்வம் பல்டி: மாற்றப்படுகிறாரா நீதிபதி?

அரசியல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரியது தொடர்பாக அந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 5) தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரைத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான விசாரணை, நேற்று (ஆகஸ்ட் 4) நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை (ஆகஸ்ட் 3) அதிமுக பொதுக்குழு வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவர் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு மனு அளித்திருந்தார். அதுபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்தும், தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஆஜராகி, இந்த வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு முறையீடாக வைத்தார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை. எனினும் தொடர்புடைய நீதிபதிக்கு இந்த விஷயத்தை தெரிவித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 4) பிற்பகல் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு, அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம்

அப்போது நீதிபதி, ‘எதற்காக இந்த வழக்கில் நீங்கள் நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தலைமை நீதிபதியிடம் முன்வைத்தீர்கள்’ எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு, ”ஜூலை 11ம் தேதி பிறப்பித்த உத்தரவில் ஓ.பன்னீர்செல்வம் குறித்து தனிப்பட்ட முறையில் விஷயங்கள், கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்ததால், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு அளித்திருந்தோம்” என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ”இதுபோன்ற செயல்பாடுகள் என்பது கீழ்த்தரமானது. இந்த தீர்ப்பில் தவறு இருந்தால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம். திருத்தம் இருந்தால் என்னிடம் முறையீடு செய்திருக்கலாம். அதைவிடுத்து தலைமை நீதிபதியிடம் சென்று, வேறு நீதிபதியை மாற்றச் சொல்லி முறையீடு செய்தது என்பது நீதித்துறையை களங்கப்படுத்தக்கூடிய செயல்” என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததுடன், “நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும்” என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறினார்.

இதையடுத்து, நேற்று (ஆகஸ்ட் 4) பிற்பகலில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்த கருத்துகள் குறித்து தலைமை நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் முறையீடு செய்தார். அதில், “நீதிபதியை மாற்ற வேண்டுமென தங்களிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில் நாளை (ஆகஸ்ட் 5) வழக்கை விசாரிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். இன்று (ஆகஸ்ட் 4) பிற்பகலிலும்கூட என் கட்சிக்காரரின் நடவடிக்கைகளை கீழ்த்தரமான நடவடிக்கை என விமர்சித்துள்ளார். நீதிபதியை மாற்றும் கோரிக்கையை கருத்தில்கொள்ள வேண்டும்” என கோரப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மன்னிப்பு

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 5) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ’நடந்தது நடந்ததாக இருக்கட்டும். திறந்த மனதோடு தாங்களே வழக்கை நடத்துங்கள். நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரத்தில் நீதிபதிமீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை’ என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மன்னிப்பு கோரியது.

இதனையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெறுங்கள். மன்னிப்பு கோரியது உட்பட தன்னிடம் கூறிய அனைத்தையும் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார். இதை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, ‘இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் கடிதம் பெற்று சமர்ப்பிப்போம்’ என்று அவரின் வழக்கறிஞர் சார்பாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை நீதிபதி ஒத்திவைத்தார்.

நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, “மன்னிப்பு கோரியதற்கு மனுவாக தாக்கல் செய்ய முடியாது. அதேசமயம், நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அளித்த மனுவை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்” எனக் கூறியது.

இதையடுத்து, அதிமுக பொதுக்குழு வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரைத்துள்ளார். அதில், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா, இல்லையா என தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்

அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வர் கடிதம்!

+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *