அதிமுக பொதுக்குழு தீர்ப்பு : ஓ.பி.எஸ் மேல்முறையீடு செய்வது எப்போது?

அரசியல்

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வரும் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

அவர் தனது தீர்ப்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழுவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. வழக்கில் நேற்று(செப்டம்பர் 2) தீர்ப்பளித்த நீதிபதிகள், அடுத்த பொதுக்குழு ஜூலை 11 நடக்கும் என ஜூன் 23ல் பொதுக்குழுவில் அறிவித்ததே நோட்டீஸ் தான்.

பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நடத்தப்படும் சிறப்பு கூட்டங்களுக்கு இன்னொரு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.

ஒ.பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் ஜூலை 11 பொதுக்குழு கூட்டப்படும் அறிவிக்கப்பட்டால், தனக்கு தெரியாது என கூற முடியாது.

அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் உள்ள பொதுக்குழுவுக்குதான் உச்ச பட்ச அதிகாரம் உள்ளது.

இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். இடையே பிரச்சினை நிலவுவதால், ஜூன் 23ல் அவைத்தலைவர் அழைப்பு விடுத்த ஜூலை 11 பொதுக்குழு சட்டவிரோதம் என கூற முடியாது.

எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டதா, இல்லையா என்பதை பிரதான வழக்கு தான் முடிவு செய்யும் என்று கூறினர்.

இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது மீண்டும் உறுதியானது.

அவர் சார்பில் கூட்டப்பட்ட பொதுக்குழுவையும் செல்லும் என்று நீதிமன்றம் அறிவித்தது. இது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம், சட்டப்போராட்டம் தொடரும் என்று நேற்றே (செப்டம்பர் 2) ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்தநிலையில் அவர் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மனுவும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலை.ரா

தூத்துக்குடி படுகொலையும் எடப்பாடி பழனிசாமியும்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *