அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்த தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை நாளை (நவம்பர் 16) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீது கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தனி நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனு நவம்பர் 15ஆம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.
அதன்படி ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷெரீஃப் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே தனிநீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மனுவை பட்டியலிட நீதிமன்ற பதிவருக்கு உத்தரவிட்டு, ”ஓபிஎஸின் மேல்முறையீட்டு மனு நாளை காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!
’தகைசால் தமிழர்’ சங்கரய்யா காலமானார்!