பன்னீர்-தினகரன் சந்திப்பு நடக்கப்போகும் இடம் இதுதான்! 

அரசியல்

அதிமுகவில் மீண்டும் அதிகாரப் போட்டிக்கான வார்த்தைப் போர் வலுவடைந்திருக்கிறது.

ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவுக்குப் பிறகு  எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்குமான  சட்டப் போராட்டமும் அறிக்கைப் போராட்டமும் தொடர்கின்றன. 

பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்று எடப்பாடி சொன்னாலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார் பன்னீர் செல்வம்.

இந்த நிலையில் நவம்பர் 18 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம், ’தங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்’ என்று தினகரன் கூறியது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “தினகரனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்” என்று பதிலளித்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் தினகரனை பன்னீர்செல்வம் எங்கே சந்திப்பார் என்ற கேள்வி அமமுக, அதிமுக வட்டாரங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த கேள்விக்கு விடை தேடி இரு தரப்பிலும் விசாரித்தோம். “டிடிவி தினகரனையும்  ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்க வைக்க  பன்னீர் ஆதரவாளரான வைத்திலிங்கம்  ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்.

திட்டமிட்டு இருவரும் ஒரு தனிப்பட்ட இடத்தில் சந்திப்பதைவிட இருவருக்கும் பொதுவான ஓர் இடத்தில் சந்திக்கலாம் என்று  நினைத்திருக்கிறார் வைத்திலிங்கம். 

அதிமுக விவசாய அணி செயலாளரும் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது கொறடாவாகவும் இருந்த துரை.கோவிந்தராஜன் கடந்த வாரம் இறந்து விட்டார். கோவிந்தராஜன் அதிமுகவைச் சேர்ந்தவர் மட்டுமல்ல… 

தினகரன் மற்றும் வைத்திலிங்கத்திற்கு உறவுக்காரர் என்பதால் தஞ்சையில் கோவிந்தராஜன் படத் திறப்பு நிகழ்வு ஒன்றை நடத்தி அந்த நிகழ்வுக்கு  ஓபிஎஸ் – டிடிவி இருவரையும் அழைத்து  சந்திக்க முடிவு செய்துள்ளார் வைத்திலிங்கம். 

பழுத்த அதிமுக முன்னோடியின் நினைவேந்தல் நிகழ்வில் தான் அதிமுக ஒற்றுமையை பற்றி பேச முடியும்  என்ற வகையில் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் வைத்திலிங்கம்” என்கிறார்கள்.

வணங்காமுடி

பிரியா மரணம்: மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம்!

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
3
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published.