வைஃபை ஆன் செய்ததும் டெலிகிராமில் சில மெசேஜ்கள் வந்தன. அவற்றைக் கொஞ்சம் ஆராய்ந்துவிட்டு ஃபேஸ்புக் மெசஞ்சர் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அண்மையில் திருவனந்தபுரத்தில் நடந்த தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அப்போது அவர் மோடிக்கு தென்னிந்தியா மீது சிறப்புப் பற்று இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
உண்மைதான் வரப் போகும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் கணிசமான இடங்களைப் பிடிக்க வேண்டும் என்று பாஜக கண்கொத்திப் பாம்பாக இருக்கிறது.
சில மாதங்கள் முன்பு தென்னிந்திய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடத்திய அமித் ஷா இம்முறை கேரளாவில் நடத்தியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விட இந்த கவுன்சில்களின் கூட்டத்தை பாஜக ஆட்சியில்தான் அடிக்கடி நடத்துவதாகவும் அமித் ஷா கூறியிருக்கிறார்.

அமித் ஷா கடந்த சில வாரங்களாகவே ஆந்திரா, தெலங்கானா, கேரளா என்று சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். பாஜக வட இந்தியாவில் நிதிஷ்குமார் உள்ளிட்ட முக்கிய கூட்டணி சகாக்களை இழந்திருக்கிறது.
பல மாநிலங்களில் அங்கே கூட்டணி இல்லை. இந்த நிலையில் தென்னிந்தியாவில் இருந்து எம்பிக்கள் ஜெயிப்பதை முக்கியம் என்று கருதுகிறது பாஜக.
இந்த பின்னணியில்தான் தமிழகத்திலும் சில முக்கிய கணக்குகளை போட்டு வருகிறது பாஜக. அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு அதிரடியான கள வியூகத்தை அரங்கேற்றி வருகிறது பாஜக.
அதில் பல பிளாப் ஆனாலும் சில கைகொடுக்கும் என்பதுதான் பாஜக தலைமையின் நம்பிக்கை. மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் ஏற்கனவே கூறியிருந்தபடி மத்திய அரசின் நலத்திட்டங்களை தமிழகத்தில் அழுத்தமாக எடுத்துச் சொல்லவில்லை என்ற ரிப்போர்ட்டின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை வேகவேகமாக செய்து வருகிறது பாஜக.
அதில் முதல் கட்டம் மத்திய அமைச்சராக இருக்கும் முருகனை தமிழகத்தில் பரவலாக விழாக்களில் கலந்துகொள்ள வைத்து மத்திய பாஜக தமிழகத்துக்கு செய்து வரும் திட்டங்கள் பற்றிய விவரங்களை ஆதாரபூர்வமாக எடுத்துச் சொல்ல வேண்டும், மத்திய அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பவை.
இதன் அடிப்படையில்தான் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முருகனுக்கு அறை ஒதுக்கிக் கொடுத்துள்ள பாஜக மேலிடம், முருகனுக்கு என்று சென்னையில் அரசு அலுவலகம் ஒன்றையும் பொதுமக்கள் அதிக அளவு தொடர்புகொள்ளும் வகையில் ஏற்படுத்திட வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அண்ணாமலை, முருகனை அடுத்து தமிழக ஆளுநரையும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு பயன்படுத்த பாஜக அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆளுநர்கள் வெளிப்படையாக அரசியல் செய்ய மாட்டார்கள் என்ற ஜனநாயக மரபை பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல மாநிலங்களிலும் ஆளுநர்கள் அடித்து நொறுக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்த வழியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசின் விழாக்களில் பங்கேற்க வைத்து அந்த விழாக்களில் மோடி அரசின் நலத்திட்டங்கள் பற்றி பேசவைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம்.
ஆளுநர் ரவி ஆங்கிலத்தில் பொளந்துகட்டுவார். அது தேவையில்லை., தமிழில் பேச வேண்டும் என்று ஆளுநருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

முருகனோ, அண்ணாமலையோ பொது இடங்களில் பேசும்போது கட்சி அரசியல் பேசிதான் ஆக வேண்டும். ஆனால் ஆளுநர் பதவியில் இருக்கும் ஆர்.என்.ரவி பாஜக தாமரை என கட்சி அரசியல் பேச முடியாது.
அதேநேரம் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை மக்களுக்கு அவர்களின் மொழியிலேயே எடுத்துச் செல்ல வேண்டும். எனவே ஆளுநர் மத்திய அரசு விழாக்களில் கலந்துகொண்டு தமிழில் பேச வேண்டும்.
ஆரம்பத்தில் எதிர்க்கட்சியினர் சிரிப்பார்கள், கிண்டல் செய்வார்கள். ஆனால் ஆளுநர் தொடர்ந்து பல மேடைகளிலும் தமிழில் பேச வேண்டும். மோடி அரசு ஒவ்வொரு துறையிலும் செய்து வரும் மக்கள் நலத் திட்டங்களின் விவரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இது படிப்படியாக மாற்றத்தை உண்டாக்கும் என்பதுதான் மத்திய அரசு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியிருக்கும் மெசேஜ். இதன்படி ஆளுநர் ஆர்.என்.ரவி இப்போது வேகமாக தமிழ் கற்று வருகிறார். இதற்கென தமிழாசிரியர்களையும் அமர்த்தியிருக்கிறார்,
அண்மையில் ஈரோட்டில் தீரன் சின்னமலை விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘தமிழ் மக்களை போல தமிழில் பேச வேண்டும் என்பது என்னுடைய விருப்பம், ஒருநாள் நிச்சயம் தமிழில் பேசுவேன்’ என்று கூறினார்.
அந்த ஒரு நாள் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு மிகவும் முன்கூட்டியே வந்துவிட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் உத்தரவு.
ஒரு பக்கம் அண்ணாமலை, முருகன் போன்றோரின் அரசியல் மேடைகளோடு… மத்திய அரசு விழாக்கள், பல்வேறு சமுதாயங்களின் கலாச்சார விழா மேடைகள் ஆகியவற்றில் ஆளுநரும் தமிழில் பேச வேண்டும் என்பதுதான் டெல்லியின் உத்தரவு.
இதற்காகத்தான் வேகவேகமாக தமிழ் கற்று வருகிறார் ஆளுநர். விரைவில் ஆளுநரின் முழு தமிழ் உரையை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் ஆளுநர் மாளிகை வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து சைன் அவுட் ஆனது மெசஞ்சர்.
டிஜிட்டல் திண்ணை: மோடி சர்வே- முருகனுக்கு புது அசைன்மென்ட்: தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?
எப்பா போதும் போதும் பிரதமர் பேச்சு வள்ளுவர் கேட்டால் தன் தாடியல உயிரை மாயிதுக்கொள்வார்….. இனி ஆளுநர், இவரு எத பத்தி சொல்ல போறாரு