மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 13) புதிய வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்தினார். opposition walkout new income tax
இந்தியாவில் தற்போது வரை 1961 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிச் சட்டம் நடைமுறையில் உள்ளது. மொத்தம் 298 பிரிவுகளைக் கொண்டிருந்த இந்த சட்டத்தில் கடந்த 60 ஆண்டுகளில் பலமுறை திருத்தம் செய்யப்பட்டது.
இது வரி செலுத்துவோரால் சிக்கலானதாகவும் புரிந்துகொள்ள கடினமாகவும் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் 1961 ஆம் ஆண்டின் தற்போதைய வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் முயற்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி மசோதாவை இன்று மதியம் 2 மணியளவில் அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து சபாநாயகர் ஓம் பிர்லா அதனை மக்களவையின் தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்குமாறு வலியுறுத்தினார்.
புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்களுக்குள் 536 பிரிவுகள், 23 அத்தியாயங்கள் மற்றும் 16 அட்டவணைகளைக் கொண்டுள்ளது.
இதில் வரி தொடர்பான நீண்ட விளக்கங்கள் மற்றும் சட்டக் குறிப்புகள் உள்ளன. வரி செலுத்துவோரின் உரிமைகள் மற்றும் கடமைகளை தெளிவாக கோடிட்டுக் காட்டும் ஒரு புதிய பகுதியைக் கொண்டுள்ளது.
மேலும், இதில் எளிமையான மற்றும் தெளிவான சொற்களைப் பயன்படுத்துகிறது மற்றும் புரிந்து கொள்வதற்கு சிக்கலான சட்ட விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளன. ‘மதிப்பீட்டு ஆண்டு’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘வரி ஆண்டு’ என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு! opposition walkout new income tax
எனினும் புதிய வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தன.
இதுதொடர்பாக வெளிநடப்பு செய்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கூறுகையில், “புதிய வருமான வரி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோதே அதை எதிர்த்தோம், ஏனெனில் இது எந்த நன்மைகளையும் வழங்காது. இந்த மசோதா முந்தைய மசோதாவை விட மிகவும் சிக்கலானது” என்று தெரிவித்தார்.