மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங்கிரஸ் சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று (ஜூலை 24) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு ஆளும் ஆந்திரா மற்றும் நிதிஷ்குமார் ஆளும் பீகாருக்கு பல திட்டங்கள் அறிவித்ததோடு, அதிக அளவில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இதனையடுத்து எதிர்க்கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலங்களை மத்திய அரசு புறக்கணித்துள்ளதாக இந்தியா கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து இன்று டெல்லியில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக தமிழில் எழுதப்பட்ட கண்டன பதாகைகளுடன் வந்த தமிழக எம்.பிக்கள், பட்ஜெட்டில் கூட்டாட்சி தத்துவம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், நீதி வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
இந்த போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட்!
முன்னதாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
அப்போது அவர், “மத்திய அரசின் பட்ஜெட் ஆனது நாற்காலியை காப்பாற்றும் நோக்கத்தில் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட பட்ஜெட்.
அதில் தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு என எதுவும் அறிவிக்கப்படவில்லை.
சிலரை மகிழ்ச்சியாக வைத்திருக்க மட்டுமே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை இதுபோன்ற பட்ஜெட்டை நான் பார்த்ததில்லை. இதற்கு எதிராக ஒட்டுமொத்த இந்திய கூட்டமைப்பும் கண்டனம் தெரிவிக்கிறது” என கார்கே பேசினார்.
தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச எழுந்த நிலையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.
எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை!
அப்போது பேசிய நிதியமைச்சர், ”மத்திய அரசின் பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை. மாநில பெயர்களை குறிப்பிடவில்லை என்றால் அது புறக்கணிப்பு என்று ஆகிவிடாது. திட்டமிட்டே மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன” என பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் : 18 பேர் பலி!
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின் : அண்ணாமலை விமர்சனம்!
இப்ப உங்க கண்களுக்கு பிகார், ஆந்திரா மட்டுமே தெரிகின்றன என்பது அப்பட்டமான உண்மை. அவர்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு நிதி ஒதுக்குகிறீர்கள்?