பாட்னா சந்திப்பு வகுத்துள்ள புதிய அரசியல் பாதை!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

பீஹார் தலைநகர் பாட்னாவில்  2023 ஜூன் 23 அன்று நிகழ்ந்த இந்திய அரசியல் கட்சி தலைவர்களின் சந்திப்பு மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பெரும்பாலான ஊடகங்களின் பிரச்சினை என்னவென்றால் அவர்கள் அரசியல் என்பதே தேர்தல் வெற்றி தோல்வி மட்டுமே என்று கருதுவதுதான்.

பாட்னா சந்திப்பு என்றால் உடனே எப்படி தொகுதி பங்கீடு நடக்கும், யார் பிரதமர் வேட்பாளர், ஒற்றுமை நீடிக்குமா, பாஜக-வை இந்தக் கூட்டணி தோற்கடிக்குமா என்றெல்லாம் யூகங்களைப் பேசுவதும், ஆரூடம் கூறுவதும் மட்டுமே அரசியல் பேச்சாக உள்ளது.

தேர்தல்கள் முக்கியம்தான். ஆனால் தேர்தல் வெற்றி, தோல்விகள் மட்டுமே அனைத்தையும் தீர்மானிப்பதில்லை. அவை ஆழமான அரசியல் மாற்றங்களின் வெளிப்பாடுகள்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் எதிர்வினையும் ஊடகங்களின் மேலோட்டமான அணுகுமுறைக்கு இணையாகத்தான் உள்ளது. புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காகக் கூடியுள்ளார்கள் என்று எள்ளி நகையாடியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. உண்மையிலேயே பாட்னா சந்திப்பில் பங்கேற்ற கட்சிகளிடையே காத்திரமான தேர்தல் உடன்படிக்கை ஏற்பட்டால் பாஜக மீண்டும் ஒன்றிய அரசை கைப்பற்றுவது மிகவும் கடினமானது என்பதுதான் கள நிலைமை.

அதனால் அந்த அச்சத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க மிகப்பெரிய ஓர் அரசியல் நகர்வை உதாசீனம் செய்வதுதான் பாஜக-வின் தந்திரமாக உள்ளது. அங்கே கூடிய கட்சிகளெல்லாம் குடும்ப அரசியல் செய்பவை, அவர்கள் சுயநலத்துக்காகக் கூடுகிறார்கள் என்றெல்லாம் பேசி முக்கிய பிரச்சினையான ஒன்றிய அதிகாரக் குவிப்பை, எதேச்சதிகார போக்கைக் குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளாமல் நழுவுகிறது பாரதீய ஜனதா கட்சி.

பெரும்பாலான ஊடகங்களும் சரி, பாஜக-வும் சரி புரிந்துகொள்ளாத மிக முக்கியமான ஓர் அரசியல் பரிமாணம் இந்தச் சந்திப்புக்கு இருக்கிறது. அதுவே இந்த சந்திப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது. அது என்னவென்றால் மாநில அரசியல் களங்களின் தொகுப்பே தேசிய அரசியல் என்னும் ஒன்றிய அரசியல் என்ற உண்மை நிறுவப்பட்டிருப்பதுதான்.

குறிப்பாக தமிழக முதல்வரின் பரிந்துரைகளில் ஒன்றான மாநில அளவிலேயே கூட்டணி முடிவு செய்யப்படலாம் என்பதை சிந்தித்தால் இந்த முக்கியத்துவம் மேலும் துலக்கம்பெறும். அதை நாம் முழுமையாக உணர சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாக திரும்பிப் பார்க்க வேண்டும்.

சுதந்திர இந்திய அரசியலின் முதல் நான்கு திருப்புமுனைகள்

சுருக்கமாக முதலில் ஆண்டுகளை குறித்துக்கொள்வோம்: 1977, 1989, 1999, 2014. இந்த நான்கு ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில்தான் நாம் அடர்த்தியான, சிக்கலான எளிதில் புரிந்துகொள்ள முடியாத அரசியல் நகர்வுகளின் வெளிப்பாட்டைப் பார்க்க முடியும்.

முதல் திருப்புமுனை நெருக்கடி நிலை அகற்றப்பட்டவுடன் உருவான ஜனதா கட்சி என்ற கலவையான அரசியல் சக்திகளின் காங்கிரஸுக்கு எதிரான ஒருமிப்பும், தேர்தல் வெற்றியும்.

இரண்டாவது மீண்டும் காங்கிரஸின் மேலாதிக்கத்துக்கு எதிராக ஜனதா தளம், பாரதீய ஜனதா கட்சி என்று இரண்டாகப் பிரிந்த அதே அரசியல் ஒருமிப்பின் வெற்றி. இது வெகுவிரைவில் மண்டலா, மந்திரா என்ற தீவிர முரணாக வடிவம் பெற்றது.

மூன்றாவது பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் இரண்டுமே மாநிலங்களில் வேரூன்றிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆண்ட காலத்தைத் தொடங்கி வைத்த வாஜ்பேயி பிரதமரான 1999.

இதற்கடுத்த நான்காவது திருப்புமுனைதான் பாரதீய ஜனதா கட்சி தனி பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் ஆட்சியமைத்த 2014 தேர்தல்.

இந்த நான்கு திருப்புமுனைகளையும் நாம் புரிந்து கொள்ள இரண்டு அடிப்படை அரசியல் நுட்பங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று உலகளாவியது. இரண்டு உள்நாட்டு அளவிலானது.  இந்த இரண்டும் இணைந்துதான் பல்வேறு அரசியல் அணிசேர்க்கைகளை, சாத்தியங்களை உருவாக்குகின்றன.  

உலகளாவிய அரசியல் வரலாற்றின் முக்கிய முரண் என்பது தனியுடமை, சுதந்திர சந்தை ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கும், பொதுவுடமை, அரசுக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பின்பற்றுவதற்குமான முரண். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இது அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இடையிலான பனிப்போர் காலமாக சர்வதேச சூழலை வடிவமைத்தது. முற்றிலும் தனியுடமை, பொதுவுடமை என்று தீர்மானிக்காவிட்டாலும் பெருமுதலீட்டுக்கு ஆதரவு அரசியலா, சோஷலிச அரசியலா என்ற கேள்வி ஒவ்வொரு மக்களாட்சி சமூகத்திலும் முக்கியமான கேள்வியாகவே நிலவியது.

உள்நாட்டு அரசியல் வரலாற்றின் முக்கிய முரண் என்பது உயர்தட்டு அரசியல் சக்திகளின் பிடியில் அரசியல் உள்ளதா அல்லது அடித்தட்டு மக்களின் பிரதிநிதிகளின் கையில் அரசியல் உள்ளதா என்ற கேள்வி. இந்திய தேசிய காங்கிரஸின் துவக்கம் என்பது பணக்காரர்களின், உயர்வகுப்பினரின், ஆங்கிலக் கல்வி பயின்றவர்களின் முயற்சியாகவே இருந்தது வெளிப்படையானது.

காந்தி முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்த பிறகே அவர் காங்கிரஸின் உயர்தட்டு அரசியல்வாதிகளுக்கும், வெகுமக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கும் பாலமாக விளங்கத் தொடங்கினார். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகள் முதன்மை கவனம் பெற்றன. இந்தியாவில் ஜாதி அமைப்பு ஏற்றத்தாழ்வினைக் கட்டமைப்பதாக இருந்ததால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின், தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் அரசியல் எழுச்சியும் முக்கியமான கூறுகளாக இருந்தன.

படித்தவர்களின், பணக்காரர்களின், ஆதிக்க ஜாதியினரின் அரசியல் என்பது ஆங்கில மொழியின் துணையுடன் அகில இந்திய தன்மை கொண்டதாக விளங்குவதும், சாமானியர்களின், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோரின் அரசியல் என்பது இந்திய மொழிகள் சார்ந்து மாநில அளவில் அமைவதும் இயல்பானதாக இருந்தது. இந்தியாவின் தலைசிறந்த சாமானியர்களின் அணிசேர்க்கையான தி.மு.க இதற்கு சிறந்ததோர் உதாரணம் எனலாம்.  

இந்தப் பல்வேறு கூறுகளை கீழ்க்கண்டவாறு  முரண்களாகத் தொகுத்துக் கொள்ளலாம்:

நாம் கருத்தியல் ரீதியாக இப்படிப் பகுத்துக்கொண்டாலும் நடைமுறையில் இந்தப் பல்வேறு கூறுகளும் வெகுஜன அரசியலில் கலந்து, முயங்கித்தான் காணப்படும். குறிப்பாக ஒரே அணியாக இருக்க வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு இடையிலான முரணின் தீவிரம் அணிசேர்க்கைகளை குழப்பிவிடும். வெகுஜன அரசியல் கட்சிகள் அனைத்து முரண்களையும் சமன்செய்து உள்ளிழுக்கவே முயற்சி செய்யும்.

ஆனாலும்கூட ஒவ்வொரு கட்சியின் அணி சேர்க்கையில் சில அடிப்படை பண்புகள் அமைந்துவிடுவது என்பதும் தவிர்க்க இயலாததுதான். உதாரணமாக காங்கிரஸ் எவ்வளவுதான் முதலீட்டிய வளர்ச்சியை அனுசரித்தாலும் காந்தியின் எளியோர் நலன் சார்ந்த அக்கறை, நேருவின் சோஷலிச நோக்கு ஆகியவை அதில் தொடர்ந்து இயங்குவது தவிர்க்க இயலாததாக உள்ளது. அதேபோல சமூக நீதி என்பதே தி.மு.க-வின் உயிர்மூச்சாக விளங்கிவந்துள்ளதையும் காண முடியும்.  

இவையனைத்தையும் மனதில் கொண்டு மேலே சொன்ன இந்திய அரசியலின் நான்கு திருப்புமுனைகளையும் காண்போம்.

முதல் திருப்புமுனை 1977: காங்கிரஸுக்கு மாற்று

இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் முப்பதாண்டுகளில் காங்கிரஸ் பல்வேறு கருத்தியல் போக்குகளையும், பல்வேறு சமூகப் பகுதிகளையும் தனக்குள்ளேயே அணிகளாகக் கொண்டு கட்சிக்குள்ளேயே கூட்டணியாக இந்திய அரசியலை முன்னெடுத்தது எனலாம். தமிழ்நாடு, காஷ்மீர், பஞ்சாப், கேரளா ஆகிய சில மாநிலங்களில் மட்டுமே மாநில அளவிலான தனித்துவமான அரசியல் முதலிலேயே உருப்பெற்றதைக் காணலாம்.

நேருவைவிட இந்திரா காந்தி சோஷலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவராகவும், ரஷ்ய ஆதரவு நிலைபாட்டைக் கொண்டவராகவும் விளங்கினார். அவருக்கு எதிரான தீவிர வலதுசாரி, தீவிர இடதுசாரி, நிலப்பிரபுத்துவ, மதவாத சக்திகளெல்லாம் ஒரு வலுவற்ற சிதறிய அரசியல் முனைப்புகளாகவே இருந்தன. ஆனால் தனக்கான வெகுஜன ஆதரவுத் தளத்தை விரிவாக்குவதில் இந்திரா காந்தி காட்டிய முனைப்பு அவரை சர்வாதிகார விழைவை நோக்கி செலுத்தியது நெருக்கடி நிலைக்கு காரணமானது.

பதினெட்டு மாத கால நெருக்கடி நிலை இந்திய மக்களாட்சிக்குக் கொடுக்கப்பட்ட அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ் மதவாதிகளையும், நக்சலைட்டுகளையும் ஒருசேர தலைமறைவு வாழ்க்கைக்குத் தள்ளியது. இதன் விளைவாக இந்திரா காந்தி எதிர்ப்பை மட்டுமே மையமாகக் கொண்டு பல்வேறு முரண்பட்ட அரசியல் சக்திகளும் ஐக்கியமாகி ஜனதா கட்சி என்ற புதிய அரசியல் அவதாரம் பிறந்தது. இந்தக் கருத்தியல் பொருந்தாக் கலவை முப்பதே மாதங்களில் சிதறுண்டது. ஆனால் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு எதிரான அரசியல் அணிசேர்க்கைக்கான அரசியல் தளம் உருவானது.

இரண்டாவது திருப்புமுனை 1989: காங்கிரஸுக்கு மாற்றாக இரண்டு முனைகள்

எண்பதுகளில் உலக அரங்கில் நியோ லிபரல் அரசியல் சக்திகள் பெரும் எழுச்சி பெற்றன. அமெரிக்காவில் ரீகனும், பிரிட்டனில் மார்கரெட் தாட்சரும் இந்த மாற்றங்களை தலைமையேற்று நிகழ்த்தினார்கள். சீனா அமெரிக்க முதலீட்டை அனுமதித்தது. ரஷ்யா பெரும் உள்நாட்டு சிக்கல்களை, தேக்கத்தைச் சந்தித்தது. மொத்தத்தில் முதலீட்டிய சக்திகள் பெரும் எழுச்சி பெற்றன.

இந்தியாவில் இந்திரா காந்தி சீக்கிய அடையாளவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பின் பதவியேற்ற ராஜீவ் காந்தி, 1984ஆம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தார். உலகளாவிய மாற்றங்களுக்கு முகம் கொடுக்க விரும்பினார். ஆனால் உள்நாட்டு முரண்கள் மிகவும் கூர்மையடைந்தன. அவரால் அவற்றை வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை.

இதன் விளைவாக 1989 ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக நாடாளுமன்றத்துக்குச் சென்றாலும், பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்க முடியவில்லை. வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் 143 இடங்களையும், பாரதீய ஜனதா கட்சி 85 இடங்களையும், கம்யூனிஸ்டு கட்சிகள் 45 இடங்களையும் கைப்பற்றின.

முற்றிலும் எதிரெதிர் கருத்தியல் நிலைகள் கொண்ட பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தர, வி.பி.சிங் ஆட்சியமைத்தார். குறுகிய ஆட்சிக்காலத்தில் துணிகரமாக பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தினார். பாஜக ராமர் ஜென்ம பூமி பிரச்சினையைக் கையிலெடுத்தது.

அத்வானி ரத யாத்திரை நடத்தினார். அவரை லாலு யாதவ் கைது செய்ததால், பாஜக ஆதரவை விலக்கிக் கொள்ள வி.பி.சிங் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் மதவாத அரசியலா, சமூக நீதி அரசியலா என்பது வட மாநிலங்கள் பலவற்றில் அரசியலைத் தீர்மானிக்கும் முரணாக மாறியது.  

opposition party meeting June 23

மூன்றாவது திருப்புமுனை 1999: தேசிய கட்சி, மாநிலக் கட்சிகள் கூட்டாட்சி

வி.பி.சிங் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து நடந்த 1991 தேர்தலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் நரசிம்ம ராவ் தலைமையில் ஆட்சியமைத்தது. சோவியத் ரஷ்யா வீழ்ச்சிக்குப் பின் உருவான உலக முதலீட்டியக் கட்டமைப்பில் இந்தியாவும் இணைவது தவிர்க்க இயலாததாக மாறியது. உலகமயமாதல் என்றழைக்கப்பட்ட இந்த மாற்றத்தில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதே வளர்ச்சிக்கு வழி என்ற புதிய நடைமுறை உருவானது.

ஆனால் இதனால் விளைந்த அதிருப்திகளின் விளைவாக காங்கிரஸ் மீண்டும் ஆட்சியிழந்தது. காங்கிரஸும் அல்லாத, பாஜக-வும் அல்லாத மூன்றாவது அணி கட்சிகளின் ஆட்சி முதலில் தேவ கெளடா தலைமையிலும், பின்னர் ஐ.கே.குஜ்ரால் தலைமையிலுமாக இருபது மாதங்களே நீடித்தது. இந்த ஆட்சியில் தி.மு.க ஒன்றிய அமைச்சரவையில் பங்கேற்றது. ஆனால் வெளியிலிருந்து ஆதரவு அளித்த காங்கிரஸ் தன் ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து நடந்த 1998 தேர்தலிலும், 1999 தேர்தலிலும் வாஜ்பேயி தலைமையிலான பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்றாலும் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி ஆட்சியமைத்தது. முதலில் 1998ஆம் ஆண்டு அமைந்த கூட்டணி ஆட்சி ஜெயலலிதா ஆதரவை விலக்கிக் கொண்டதால் கவிழ்ந்தது. ஆனால் 1999ஆம் ஆண்டு மீண்டும் வாஜ்பேயி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்தபோது தி.மு.க அதில் அங்கம் வகித்தது; முழு ஐந்தாண்டுகளை நிறைவு செய்தது.  

இதைத்தொடர்ந்து பத்தாண்டுகள் ஆட்சி செய்த மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலும் கூட்டணி மந்திரி சபையே தொடர்ந்தது. அதிலும் தி.மு.க அமைச்சரவையில் அங்கம் வகித்தது. இந்த தேசிய கட்சி – மாநிலக் கட்சிகள் கூட்டணி ஆட்சிக் காலம் 2014ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

opposition party meeting June 23

நான்காவது திருப்புமுனை 2014: மீண்டும் தேசிய கட்சியின் தனியாட்சி

மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி ஆட்சி உலக முதலீட்டிய அமைப்பில் இந்தியாவின் வளர்ச்சியைச் சிறப்பாக உறுதி செய்த அதே நேரத்தில், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும் அறிமுகம் செய்தது. குறிப்பாக MGNREGA  என்ற நூறு நாள் வேலை திட்டம் என்ற கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் கிராமப்புற வாழ்வாதாரத்தில் புரட்சிகர மாறுதலை கொண்டுவந்தது.

இதற்கிடையில் 2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலைத் தொடர்ந்து உலகெங்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீது எழுந்த கண்டனத்தை பயன்படுத்தி பாரதீய ஜனதா கட்சி இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்பையும், இந்துத்துவ அரசியலையும் முன்னெடுத்தது. முழுமையான முதலீட்டிய வளர்ச்சிக்கான கட்சியாகவும் குஜராத் வளர்ச்சியைக் காட்டி பாஜகவும், மோடியும் தன்னை முன் நிறுத்திக் கொண்டதில் மீண்டும் தேசியக் கட்சியின் தனியாட்சி 2014இல் துவங்கியது.

அதிலிருந்து வலதுசாரி பெருமுதலீட்டிய அரசியலை முன்னெடுக்க மாநில அரசியல் சக்திகள் தடையெனக் கருதி பாஜக மாநிலக் கட்சிகள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்து வருகிறது.

opposition party meeting June 23

ஐந்தாவது திருப்புமுனை: பாட்னா சந்திப்பு 2023

இந்த விரிவான பின்னணியில் நாம் காணக்கூடியது என்னவென்றால் மாநில அரசியலின் திட்டவட்டமான எழுச்சியைத்தான். பாட்னா சந்திப்பில் காங்கிரஸ் பிற மாநிலக் கட்சிகளுக்கு இணையாகவே கலந்து கொண்டுள்ளது. சந்திப்புக்கான முன்னெடுப்பே பீஹார் மாநிலக் கட்சிகளிடமிருந்துதான் வந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் மாநில அரசியலில் முரண்பாடுகள் இருந்தாலும், அது வேறு, ஒன்றிய அரசியலில் பாஜக-வை இணைந்து எதிர்ப்பது வேறு என்ற அரசியல் தெளிவுடன் கட்சிகள் ஒன்று கூடின. சி.பி.ஐ (எம்). காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என கேரளத்திலும் வங்கத்திலும் அரசியல் முரண் சக்திகளாக உள்ள கட்சிகள் ஒன்று கூடியுள்ளது முற்றிலும் புதியதொரு அரசியல் களத்தைக் கட்டமைக்கிறது.

இதன் பொருள் என்னவென்றால், மாநில அரசியல் களங்களின் தொகுப்பே தேசிய அரசியல் என்பதாகும். அதாவது உயர்தட்டு தேசிய அரசியல் என்பது முடிவுக்கு வந்துவிட்டது. இனி இந்தியாவில் அரசியல் என்பது மாநிலங்கள் அளவில் உருவாகும் அடித்தட்டு மக்கள் அரசியல்தான்.

என்னதான் பாஜக “ஒரே தேசம், ஒரே தேசம்” எனக் கூக்குரலிட்டாலும் அது ஒவ்வொரு மாநில அரசியல் களத்தையும் தனித்தனியே எதிர்கொள்ளத்தான் வேண்டும். பாகிஸ்தானைக் காட்டியோ, முஸ்லிம்களைக் காட்டியோ, சனாதன தர்மம், இந்துத்துவம் என்று பேசியோ இனி தேசிய அரசியல் மாய்மாலம் செய்ய முடியாது.

மாநிலங்களின் நலனே மக்கள் நலன்; மக்கள் நலனே ஒன்றியத்தின் நலன். ஐந்தாவது திருப்புமுனை நம்மை ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சிக்கு மட்டுமல்ல, கலைஞரின் முழக்கமான “மாநில சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி” என்ற நிலைக்கும் இட்டுச்செல்லும் காலம் தொலைதூரத்தில் இல்லை.

கட்டுரையாளர் குறிப்பு:

opposition party meeting June 23 Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: வரகரிசி – கற்கண்டுப் பொங்கல்

+1
0
+1
1
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0

1 thought on “பாட்னா சந்திப்பு வகுத்துள்ள புதிய அரசியல் பாதை!

  1. மாற்றத்திற்காக காத்திருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *