மணிப்பூர் கலவரம் குறித்து பார்வையிட எதிர்க்கட்சிகள் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் பேசினர்.
எதிர்கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றுவதற்காகவும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் சேர்ப்பதற்காகவும் விசிக தலைவர் திருமாவளவன் முன்மொழிவுகளை முன்வைத்தார்.
தீர்மானத்துக்கான முன்மொழிவுகள்:
1. மணிப்பூரில் நடைபெற்று வரும் அரசு ஆதரவு பெற்ற கலவரம் உலக அளவில் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளது. அங்குள்ள நிலை குறித்து நேரில் பார்வையிட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அனுப்ப வேண்டும்
2.. இங்கு வந்துள்ள கட்சிகள் யாவும் பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று நாடாளுமன்றத்திலும் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
குறைந்த பட்ச பொது செயல் திட்டத்தில் சேர்ப்பதற்கான முன்மொழிவுகள்:
1. மாநில உரிமைகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் இன்றைய சூழலில் மத்திய மாநில உறவுகள் குறித்தும், ஆளுநர் பதவி குறித்தும் சர்க்காரியா கமிஷன்( sarkaria commission) மற்றும்,
பூஞ்ச்சி கமிட்டி (punchhi committee ) ஆகியவை அளித்த பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றுவோம் என குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உள்ளடக்க வேண்டும்.
2. 2026 க்கு பிறகு தொகுதி மறு வரை செய்யும் போது தற்போதைய நிலை மாறாமல் தொகுதி மறு வரை செய்வதற்கு ஏற்ப வழிவகை செய்யப்படும் என்பதை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
3. எஸ்சி, எஸ்டி, ஓ பி சி மக்களின் நியாயமான பிரதிநிதித்துவம் ( fair representation) என்பது கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் எட்டப்படாத நிலையே உள்ளது.
அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் விதமாக சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என்பதை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
4. மதச் சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பை உறுதி செய்து கல்வி, வேலைவாய்ப்பு, சட்டம் இயற்றும் அவைகள் ( legislature ) ஆகிய தளங்களில் அவர்களது நியாயமான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்பதையும் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் உள்ளடக்க வேண்டும்.
5. மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நியாயமான பங்கேற்பை பெண்களுக்கு உறுதி செய்யவும் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட வேண்டும்.
6. இந்தியா முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு குறைந்தபட்ச மாத வருமானத்தை அரசே உறுதி செய்வதற்கு குறைந்தபட்ச செயல்திட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டும்.
செல்வம்
“காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவியில் ஆர்வம் இல்லை” – மல்லிகார்ஜூன கார்கே
பாஜக கூட்டணியின் 37 வது கட்சி அமலாக்கத்துறை: டிகேஎஸ் இளங்கோவன் தாக்கு!