மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து அவைக்கு வரும்படி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி துவங்கியது முதல் மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளது.
அவை நடவடிக்கைகள் துவங்கிய ஐந்து நிமிடங்களுக்குள் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு துவங்கும் அவை நடவடிக்கைகளும் அமளியால் மீண்டும் ஒத்திவைக்கப்படும். கடந்த 11 நாட்களாக தொடர்ந்து அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளது. இதனால் வேதனையடைந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரண்டாவது நாளாக இன்றும் அவைக்கு வரவில்லை. இதனால் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திர அகர்வால் அவைக்கு தலைமை தாங்கினார்.
இந்தசூழலில் இன்று (ஆகஸ்ட் 3) மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுப்ரியா சுலே, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திர அகர்வால், தேசிய மாநாட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபருக் அப்துல்லா உள்ளிட்டோர் சபாநாயகர் ஓம்.பிர்லாவை சந்தித்து அவை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.
இதுகுறித்து மக்களவையில் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “சபாநாயகர் ஓம் பிர்லா எங்கள் பாதுகாவலர். அவர் மீண்டும் அவைக்கு தலைமை தாங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். உங்கள் கருத்தை ஓம் பிர்லாவிடம் தெரிவிப்பதாக ராஜேந்திர அகர்வால் தெரிவித்தார்.
இந்தசூழலில் பாஜக அரசின் மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி ஆகஸ்ட் 10-ஆம் தேதி இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேச உள்ளார்.
செல்வம்
“2024-ல் நீங்கள் இங்கே…நாங்கள் அங்கே…” – தயாநிதி மாறன்
“நவம்பரில் கூட்டணி குறித்து முடிவு” டிடிவி தினகரன்