அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கடந்த மாதம் 23-ம் தேதி காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தினர்.
அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும், நாளையும் என இரண்டு நாள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள மொத்தம் 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் ஈஸ்வரன், ஆகியோருடன் புரட்சிகர சமூகவாத கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்) மற்றும் கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய எட்டு புதிய கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன.
பெங்களூரு தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார். அதனைத் தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
இதற்கிடையே உடல்நிலை சரியில்லாததால் எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சோனியா காந்தி, மம்தாவிடம் தொலைபேசியில் பேசியதன் பேரில் எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிபடுத்தினார்.
அதேபோன்று அவசர சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்காததால் கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்பாரா? என்பது பற்றிய விவரங்கள் தெளிவாக தெரியாமல் இருந்து வந்தது.
இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், மத்திய அரசின் அவசர சட்ட மசோதாவை நாங்கள் எதிர்ப்போம். அதில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து, பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்கிறார்.
இன்று இரவு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் அவர், நாளை நடைபெறும் கூட்டத்திலும் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்க உள்ளார். அதனையடுத்து நாளை இரவு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு அவர் சென்னை திரும்புகிறார்.
அதே வேளையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் திடீர் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதால் முதல்வர் இன்று பெங்களூரு செல்வாரா? அல்லது நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நேரடியாக பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே பாட்னாவை தொடர்ந்து பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்களை வரவேற்க, கர்நாடக முதல்வர் சித்தாராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கூட்டம் நடைபெறும் பெங்களூரு தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலுக்கு முன்புறம் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்கும் விதமாக சாலையோரத்தில் அவர்களின் உருவ படங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கூட்டம் நடைபெறும் ஓட்டலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில், “பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டுவது, குறைந்தபட்ச பொது செயல் திட்டங்களை உருவாக்குவது, எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் பிரதமரை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
அமைச்சர் பொன்முடி மற்றும் கெளதம சிகாமணி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: ஏன்?
மாணவர்கள் சரியாகப் படிக்காவிட்டால், ஆசிரியர்களின் சம்பளம் கட்!
தவறு செய்யவில்லை என்றால் பொன்முடி நிரூபிக்கட்டும்: ஜெயக்குமார்