மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் இன்று (ஆகஸ்ட் 8) மதியம் 12 மணிக்கு தொடங்கியது. அப்போது பாஜக சார்பில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ”நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி உரையைத் தொடங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், இப்போது ஏன் கவுரவ் கோகோய் பேசுவதாகக் கூறுகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது அவையில் இருந்த பாஜக எம்பிக்கள் ராகுல் காந்தி நம்பிக்கையற்றவர் என்று விமர்சித்ததால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா இரு தரப்பையும் அமைதியாக இருக்க சொன்னார். பின்னர் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு குறித்து பேசினார்.
அவர் “மோடி குடும்ப பெயர் குறித்து பேசிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. தடை தான் விதித்துள்ளது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியதோடு, ‘நான் சாவர்க்கர் இல்லை’ என்று கூறுகிறார். ஆனால் அவருக்கு சொல்கிறேன்… நீங்கள் ஒருபோதும் சாவர்க்கர் ஆக முடியாது” என்றார்.
தொடர்ந்து அவர், “இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏன் கொண்டுவரப்பட்டது?. மக்களுக்கு வீடுகள், குடிநீர், கழிப்பறைகள் வசதி ஏற்படுத்திக் கொடுத்தவருக்கு எதிரானது. இது ஏழைகளுக்கு எதிரானது” என்றார்
இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் பேசினார்.
அப்போது, “மணிப்பூர் மாநிலத்தை இதுவரை பிரதமர் மோடி ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை? மணிப்பூர் குறித்து மோடி பேசுவதற்கு ஏன் 80 நாட்கள் ஆனது? அவர் பேசியபோது கூட 30 வினாடிகள் மட்டும் தான் பேசினார். மணிப்பூர் முதல்வரை பிரதமர் மோடி ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை?” என்ற மூன்று கேள்விகளை எழுப்பிய அவர் மணிப்பூரில் பாஜக அரசின் இரட்டை இன்ஜின் அரசு தோல்வி அடைந்துள்ளது என்பதை பிரதமர் உணர வேண்டும்” என்றார்.
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் எம்.பி. டி.ஆர்.பாலு பேசுகையில், “பெரும்பான்மை மக்களை வைத்து சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. முன்பு குஜராத்தில் நடந்தது போல இப்போது மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கிறது.
மணிப்பூர் முதல்வர் உதவியற்றவராக இருக்கிறார். இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுபோன்று நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்திருப்பதாக அந்த மாநில முதல்வர் கூறுகிறார்.
பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கும் வருவதில்லை. மணிப்பூருக்கும் செல்லவில்லை. ஆனால் இந்தியா கூட்டணி மணிப்பூருக்கு சென்று அங்கு என்ன நடந்தது என்பதை கண்காணித்து வந்தது.
ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் மணிப்பூரில் நடக்கும் சட்ட விரோதத்தை கண்டித்து பாஜக தலைமையிலான அரசாங்கத்தை குற்றம்சாட்டியுள்ளன” என்று பேசினார்.
மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை, பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டி மோடி அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நல்லதையும் செய்யவில்லை என்றும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.
இந்தியா கூட்டணி சார்பில் பேசிய என்சிபி எம்.பி. சுப்ரியா சுலே, “கடந்த 9 ஆண்டுகளில் 9 மாநில அரசுகளை கவிழ்த்துள்ளது தான் பாஜகவின் சாதனை. மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்றார்.
மேலும், பால் விலை, தக்காளி விலை உயர்ந்துள்ளதை சுட்டிக் காட்டி பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்று சுப்ரியா சுலே விமர்சித்தார்.
அவருக்கு பதிலடியாக ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அணி எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே பேசுகையில், “மோடி நாட்டுக்காவும், வீர சாவர்க்கரின் இந்துத்துவா சித்தாந்தத்துக்காகவும் ஆற்றிவரும் தொண்டை பாராட்டி நம்பிக்கையில்லா தீர்மானத்தை சிவசேனா எதிர்க்கிறது” என்று தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ், “மணிப்பூர் சம்பவம் மிகவும் உணர்ச்சிகரமானது. இந்த விஷயத்தில் அரசு மிகவும் அலட்சியமாக உள்ளது. இது ஒரு திமிர் பிடித்த அரசு. இது முற்றிலும் மனித உரிமை மீறலாகும். பெண்களை வன்முறைக்கு கருவியாகப் பயன்படுத்துவது அரசியலமைப்பு ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்தார்.
பிஜு ஜனதா தளம் எம்.பி. பினாகி மிஸ்ரா பேசும் போது, “ஒரு அரசியல் கட்சியாக பாஜகவுக்கு எதிராக இருந்தாலும், இன்று மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை என்னால் ஆதரிக்க முடியாது.
ஒடிசாவுக்கு மத்திய அரசு செய்த பல விஷயங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதனால் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்குமாறு எனது கட்சியின் சார்பாக என்னால் கூறமுடியவில்லை” என்றார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நீங்கள் உண்மையில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் போது, கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடுவதால் எதுவும் நடக்காது” என்று எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.
தொடர்ந்து அவர் “வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் நிறைய செய்துள்ளார். 2014 ஆம் ஆண்டிற்கு முன், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பலர் டெல்லி மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களில் இன பாகுபாடு மற்றும் அட்டூழியங்களை எதிர்கொண்டனர்.
2014-க்குப் பிறகு நிலைமை மாறியது, சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக கவுகாத்தியில் டிஜிபி மாநாடு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்” என்று தெரிவித்தார்.
”மணிப்பூரில் கலவரம் மே மாதம் தொடங்கியது. பின்னர் எதிர்க்கட்சிகள் ஏன் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக மணிப்பூருக்கு சென்றனர்? புகைப்படம் எடுப்பதற்காகவா? ஏன் அவர்கள் ராஜஸ்தானுக்கு செல்லவில்லை? பிரதமர் மோடி மட்டும் தான் எதிர்க்கட்சிகளுக்கு இலக்கு” சுயேட்சை பெண் எம்.பி. நவ்நீத் ராணா சாடினார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, சவுகதா, “இந்த அரசாங்கம் இதயமற்ற அரசாங்கம். நமது சகோதர சகோதரிகள் இறந்து கொண்டிருக்கும் மணிப்பூருக்கு ஒரு குழு கூட செல்லவில்லை. உங்களுக்கு இரக்கம் இல்லை. அதனால் தான் எதிர்க்கட்சிகள் போல் நீங்கள்(பாஜக) மணிப்பூருக்கு செல்லவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
”எந்த ஒரு வடகிழக்கு மாநிலத்திலும் அமைதியின்மை ஏற்பட்டால், அது முழு வடகிழக்கு பகுதியையும் நாட்டையும் பாதிக்கும்” என்று காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி தெரிவித்தார்.
கேரள எம்.பி. என்.கே.பிரேமச்சந்திரன், “மணிப்பூர் போன்ற ஒரு சிறிய மாநிலத்தில் நிலைமையை நிர்வகிக்க அரசாங்கத்தால் முடியவில்லை என்றால், இந்த இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் திறமை என்ன?.
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து பிரதமர் மோடி குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாம். இந்த விவகாரத்தில் குறைந்தபட்சம் மணிப்பூர் முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “மணிப்பூருக்கு சென்று பார்த்தபோது குக்கி மற்றும் மெய்தி இனத்தைச் சேர்ந்த இருதரப்பும் பாதிப்படைந்துள்ளன என்பது தெரிய வந்தது.
பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதில் கார்கில் போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் மனைவியும் மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 3 மாதங்களாக நடந்து வரும் கலவரம் குறித்து பிரதமர் மோடியோ, முதல்வர் பைரேன் சிங்கோ கண்டனம் தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட எங்களை நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று மணிப்பூரில் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரும் வேதனை தெரிவித்தனர். மணிப்பூர் மக்களே மாநில மற்றும் மத்திய பாஜக அரசுகளின் மீது நம்பிக்கையை இழந்து நிற்கின்றனர்.
இதற்காக இந்த அரசு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் பிரதமர் கண்டிக்கத்தக்கது என்ற ஒரு வார்த்தையை கூறிவிட்டு தனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்று பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து விலக வேண்டும்” என்று தெரிவித்தார்.
மோனிஷா
சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை எப்போது தொடங்கும்?
கணவனை ‘கருப்பன்’ என அழைப்பது கொடுமையானது : நீதிமன்றம்!