தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (அக்டோபர் 18) தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை வைக்கப்பட்டது.
நேற்று காலை முதல் 613 பக்கமுள்ள இந்த விசாரணை அறிக்கை ஓர் பொது ஆவணமாகி பல்வேறு தரப்பினராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
சட்ட ரீதியாக, நிர்வாக ரீதியாக இதன் மேல் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. தனது நீண்ட நெடிய விசாரணையின் முடிவில் ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
அதாவது, “அப்பல்லோ மருத்துவமனையால் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுவதை தவிர, வேறு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் ஆணையத்தின் முன் வைக்கப்படவில்லை.
டாக்டர் ரிச்சர்ட் பீலே, ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல தயார் என்று கூறியிருந்தும், அது ஏன் நடக்கவில்லை?. டாக்டர் சமின் ஷர்மா, ஆஞ்சியோ செய்வதைப்பற்றி விளக்கிய பின், டாக்டர் ரிச்சர்ட் பீலேவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், அது ஏன் நடக்கவில்லை?.
இதனை கருத்தில் கொண்டு சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது” என்று கூறியுள்ளது ஆணையம்.
மேலும், “அனைத்து கருத்துகளில் இருந்தும் சசிகலா, டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைக்கிறது.
டாக்டர் ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் பாபு ஆபிரகாம் ஆகியோர் தனிப்பட்ட நபரின் கட்டாயத்தினால் சட்ட விரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாக செயல்படுத்தினர்.
எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் பல்வேறு நாட்களில் 21 படிவங்களில் கையெழுத்திட்டுள்ளார். அதுகுறித்து அரசுக்கு அவர் கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை. அவரிடமும் விசாரணை செய்ய ஆணையம் பரிந்துரைக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு, “ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று தக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆணையத்தின் அறிக்கையின் சுருக்கம் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை முதன்மைச் செயலாளரிடம் வழங்கப்பட்டு அத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அரசாணை வெளியிட்டுள்ளது.
நேற்று இரவே தன் மீதான ஆணையத்தின் புகார்களை மறுத்துள்ள சசிகலா, தான் எவ்வித விசாரணைக்கும் தயார் என்று கூறியுள்ளார். சட்டப்படி இந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் திசை என்னவாக இருக்கும்? மேல் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? என்ற கேள்விகளுக்கு சட்ட மற்றும் நிர்வாக வட்டாரங்களில் விடைதேடினோம்.
“ஆறுமுகசாமி ஆணையம் என்பது எடப்பாடி ஆட்சியில் 2017 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டபோது அறிவிப்பால் அமைக்கப்பட்டது. மாறாக அப்போது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி சட்டமன்ற அங்கீகாரத்துடன் ஆணையத்தை அமைத்திருந்தால் அதற்கான சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கும். ஆனால் வெறும் அறிவிப்பின் மூலம் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் சட்ட அந்தஸ்தை எளிதில் கேள்வி கேட்க முடியும்.
மேலும் ஆறுமுகசாமி ஆணையம் இந்த விவகாரத்தில் மேலும் பல மேலிட முக்கியஸ்தர்களிடம் விசாரிக்ககவில்லை. எனவே இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை முழுமையற்றது என்ற வாதத்தையும் வைக்க முடியும்.
இதையெல்லாம் தாண்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் முன் இப்போது மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன.
1. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சுருக்கத்தை மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அனுப்பியதன் மூலம் அதை அப்படியே போட்டு வைத்திருக்கலாம், அரசியலுக்காக எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
2. சில மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறையிடம் அறிக்கை பெற்று சிபிசிஐடி போலீஸார் மூலம் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்யலாம். ஆனால் அந்த முதல் தகவல் அறிக்கை என்பது சசிகலா முதல் தற்போதைய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் என அந்த எட்டு பேர் மீதும் பதியப்பட வேண்டும். அதற்கான சட்ட வாய்ப்புகள் குறைவு.
3. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் ஆய்வறிக்கையை ஆறுமுகசாமி நிராகரித்திருக்கிறார். எனவே இந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்வதை நீதிமன்றங்கள் மூலம் தடுக்கும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையை மையமாக வைத்து அதிமுகவுக்குள் தொடர் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் செய்யத்தான் ஸ்டாலினுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
மாறாக இந்த விசாரணை அறிக்கையை அடிப்படையாக வைத்து எஃப்.ஐ.ஆர். போடப்பட்டால் மேலும் பல சட்ட சிக்கல்களை அந்த வழக்கு சந்திக்கும் என்பதே தற்போதைய நிலைமை” என்கிறார்கள்.
சட்ட ரீதியாக, நிர்வாக ரீதியாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை பெரும் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் குறைவு என்றாலும்… சசிகலாவின் அரசியல் இமேஜுக்கு மிகப்பெரும் டேமேஜ் ஏற்படுத்தி விட்டது ஆணையத்தின் அறிக்கை.
ஜெயலலிதாவின் இறப்பு பற்றிய விவாதங்களையும், அதற்கு முன் ஜெ.வுக்கும் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளையும் ஆணைய அறிக்கை புட்டுப் புட்டு வைத்திருப்பதால் சசிகலாவின் அரசியல் டிராக்கை பின்னோக்கி செல்ல வைப்பதில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு பெரும் பங்கு இருக்கிறது!
–ஆரா
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர்: டி.ராஜா மீண்டும் தேர்வு!
ஜெ. மரணம்: ஆறுமுகசாமி அறிக்கையை அரசியலாக்கிவிட்டனர்-சசிகலா