ஆப்ரேஷன் லோட்டஸ் விவகாரம் தொடர்பாக புகாரளிக்க ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் குடியரசு தலைவரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள்.
ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியால் விலை பேசப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டது.
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவிற்கு கோடிக்கணக்கில் பணம் வழங்குவதாகவும், முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறிய குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அவர் கூறிய அடுத்த சில மணி நேரங்களில் கட்சியின் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கும் இத்தகைய குறுஞ்செய்திகள் கிடைக்கப் பெற்றதாகவும் தலா 20 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தினர்.
ஆனால் புலனாய்வு அமைப்புகளின் விசாரணையை திசை திருப்பவே இது போன்ற போலியான குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கிறது என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற டெல்லி சட்டமன்றத்தின் ஒரு நாள் சிறப்பு கூட்டத் தொடரில் இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறி ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே இன்றய தினம்(செப்டம்பர் 1) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது.
இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் “ஆப்ரேஷன் லோட்டஸ்” என்ற பெயரில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் குறிவைக்கப்பட்டு, ஆட்சி கலைப்பை பாஜக மேற்கொண்டு வருவதாகவும் இதுகுறித்து குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து உரிய அனுமதி வழங்கப்பட்டவுடன் இந்த சந்திப்பு நடைபெறும் எனவும் ஆம் ஆத்மி கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
சிபிஐ இயக்குநரை சந்திக்கும் ஆம் ஆத்மி