பேராசிரியர் அன்பழகனின் 101 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அன்பழகன் நூற்றாண்டு வளைவை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
திமுக முன்னாள் பொதுச்செயலாளரும், கலைஞரின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் அன்பழகனின் 101ஆவது பிறந்தநாள் விழா இன்று(டிசம்பர் 19) கொண்டாடப்படுகிறது.
43 ஆண்டுகாலம் திமுக பொதுச்செயலாளராகவும், 9 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் பேராசிரியர் க.அன்பழகன்.
அவரது நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகன் இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திலும் அவருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டு, அவரது திருவுருவச்சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம் என பெயர் சூட்டப்பட்டது. பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி, அன்பில் மகேஷ், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கலை.ரா