பாஸ்கர் செல்வராஜ்
திறந்தவெளி கழிவறை பயன்பாடு குறித்த புள்ளிவிவரங்கள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை மையமாகக்கொண்டு அரசு கழிவறை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள கோருகின்றன.
திறந்தவெளி கழிப்பறை பழக்கத்தினால் பாதிக்கப்படும் மக்களின் இருப்பிட பகுதிகளைக் கண்டறிந்து உடனடியாகக் காக்கும் பணிகளில் ஈடுபடும் அதேவேளை, அந்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும்.
பொதுவெளிகளில் மக்களின் தேவைக்கேற்ப கழிப்பறைகளின் எண்ணிக்கையை அதிகரித்து அவற்றை தூய்மையான, உலர்ந்த துர்நாற்றமற்றவையாக நிர்வகிக்க அவற்றின் உட்புற வடிவமைப்பு மற்றும் சுற்றுப்புறக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
மண்தரையைக் கட்டண வாகன நிறுத்தமாக மாற்றுவது
நகர்ப்புறங்களின் புழுதிக்கும், மழைக்கால சகதிக்கும், வடிகால் அமைப்புகளின் தேக்கத்துக்கும் நகர சாலைகளுக்கும் கடைகளுக்கும் இடையில் இருக்கும் மண்தரை முக்கிய காரணமாகிறது.
சென்னையின் முக்கிய பகுதிகள் இப்படியான மண்தரையற்று சாலைகள் அமைக்கப்பட்டு மூடிய வடிகால் அமைப்புகளை ஏற்படுத்தி பாதசாரிகள் நடக்க வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதைத் தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
தைவானில் சாலைகளின் ஒரு பகுதியை இருசக்கர வாகன நிறுத்தங்களாக மாற்றி அங்காடிக்குச் செல்பவர்கள் அங்கே வாகனத்தை நிறுத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு மணிக்கு இவ்வளவு எனக் கட்டணம் விதிக்கிறார்கள்.
நமது ஊரில் உள்ள சாலைக்கும் கடைகளுக்கும் இடையில் இருக்கும் மண்தரையிலும் சாலைகள் அமைத்து அதேபோல வாகன நிறுத்தங்களாக மாற்றி அதில் வரும் வருமானத்தைச் சாலைகளின் தூய்மைக்குப் பயன்படுத்தலாம்.
இது வாகனப் பெருக்கத்தின் காரணமாக வாகன ஓட்டிகள் கண்ட இடத்தில் வண்டியை நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதை ஒழுங்குப்படுத்தி அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துவதற்கு பழக்கப்படுத்தும்; கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து சாலைகளையும் காக்கும்; புழுதியும், சேரும் சகதியுமான சுற்றுப்புற சூழலையும் மேம்படுத்தும்.
தொழிற்துறை-வர்த்தகர்களின் ஒத்துழைப்பின் மூலம் பெருக்குவது
அடுத்து நமது கட்டமைப்புகளில் கழிப்பறையை அடிப்படையான ஒன்றாக மாற்றி அதை எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கச் செய்வது. தைவானின் முக்கிய சாலைகளில் உள்ள சிறிய உணவகத்திலும் அங்கு பணிபுரிபவர்களும் வாடிக்கையாளர்களும் பயன்படுத்த ஒரு கழிப்பறை இருக்கும். அதற்கு அருகிலேயே உணவு மேஜை இருந்தாலும் நாற்றமோ, அசூயையோ ஏற்படாது.
அந்த அளவுக்கு தூய்மையைப் பேணுவதோடு உள்ளே கழிவறைக்குள் இருக்கும் காற்றை இழுத்து வெளியேற்றும் கட்டமைப்போடு நவீனப்படுத்தப்பட்டிருக்கும். நம்மிடம் இப்படியான புரிதலோ, அதைத் தவிர்க்கும் வழிமுறைகளோ இல்லை. நமது ஊரின் பெரிய உணவகங்களில்கூட கழிப்பிடங்கள் இப்படியான கட்டமைப்பின்றி இருப்பதைக் காண முடிகிறது.
இது இந்திய வீடுகளுக்கும் பொருந்தும். இந்தக் குறைகளைக் களைந்து அனைத்து நடுத்தர, பெரிய அங்காடிகள், உணவகங்களில் கழிவறைகள் இருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். கழிவறைகளில் மேற்கூரையை ஒட்டி காற்றை இழுத்து வெளியில் வளிமண்டலத்தில் கலக்கச் செய்யும் சாதனங்களின் பயன்பாட்டைக் கொண்டுவர வேண்டும்.
தற்போதைய அரசியல் கட்டமைப்பில் சட்டம் என்பதை ஆளும்வர்க்கம், உழைக்கும் மக்களை ஒடுக்கும் கருவியாகத்தான் பயன்படுத்துகிறது. உண்மையில் சட்டம் என்பது நமக்கான விதிகளை நாமே உருவாக்கிக்கொண்டு நம்மை நாமே நிர்வகித்துக்கொள்ளும் வழிமுறை.
அரசு கழிவறையைக் கட்டாயமாக்கி சட்டம் இயற்றி அதைப் பின்பற்ற ஆணையிடும் நடைமுறைக்கு மாறாக சிறு, குறு, நடுத்தர உற்பத்தியாளர்கள், தொழிற்துறையினர், வணிகர் சங்கத்தை அணுகி அரசின் நோக்கத்தை, சமூகத்தில் கழிப்பறையின் தேவையை, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் திறந்தவெளி கழிப்பறை ஏற்படுத்தும் பாதிப்புகளை எடுத்துக்கூறி அவர்களின் மூலமாகவே (Voluntary) இந்தச் சட்டத்தைச் செயல்படுத்த முனைய வேண்டும்.
சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு ஊக்கமும், தேவைப்படுவோருக்கு உதவியும் செய்ய வேண்டும். கழிவறை அமைக்கவியலாத பகுதிகளில் அரசு பொதுக் கழிப்பறைகளை நிறுவ வேண்டும். இனிவரும் காலங்களில் தொழிற்துறை, வணிக, வர்த்தகக் கட்டமைப்புகளுக்கு கழிவறைகள் இருப்பதை உறுதி செய்த பின்பே அனுமதி அளிக்க வேண்டும்.
படிப்படியாக கழிவறைகளை நவீனமாக்குவது
சாலை-நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மெதுவாக நீண்டகால முயற்சியில் நடப்பது. மேலும், எல்லா பொதுக்கழிப்பிடம் தூய்மைக்கும் அருகில் மண்தரையற்ற சூழலை ஏற்படுத்துவது சாத்தியமுமில்லை. பொதுவாக, வீட்டுக்குள் செல்வதற்கு முன்பாக கால்களைக் கழுவிவிட்டு உள்ளே செல்வது மக்களின் பழக்கம்.
அந்தப் பழக்கத்தை நீட்டித்து பொதுக் கழிவறைக்குள்ளும் காலணிகளைச் சுத்தம் செய்துகொண்ட பின்பே அனுமதிப்பது என்ற முறையை உருவாக்கலாம். இதைச் செயல்படுத்த அதிக விசையில் காற்றை உள்ளிழுக்கும் அல்லது காற்றையும் நீரையும் பீச்சியடிக்கும் கருவிகளை வடிவமைத்து எல்லா கழிவறைக்கு முன்னும் வைத்து மக்களைப் பயன்படுத்த வைக்கலாம்.
இது கழிவறை தூய்மையைப் பேண உதவுவதோடு மக்களிடம் பொது சுத்தம் சார்ந்த பிரக்ஞையையும் வளர்க்கும்.
நமது பொதுக் கழிப்பறைகள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். கிருமிகள் வளர ஏதுவான இந்தச் சூழல் நிச்சயம் ஏற்புடையது அல்ல. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நமது டப்பா கலாச்சாரம். இப்படி டப்பாவினால் நீர் ஊற்றுவது முழுமையாகக் கழிவுகளை வெளியேற்றுவதும் இல்லை.
அடுத்து, பயன்படுத்த செல்பவரை அசூயை கொள்ளவைக்கும் இதை ஒழித்து முதலில் கைகளால் இயக்கி நீரை ஊற்றும் முறையையும் (Manual flush) பின்பு படிப்படியாக தானியங்கி முறைக்கும் கண்டிப்பாக மாற்ற வேண்டும். அதேபோல கழுவுவதற்கு கைகளைப் பயன்படுத்துவதையும் கண்டிப்பாக நாம் மாற்ற வேண்டும். இதை மேற்குலகினர் நம்மை ஏளனம் செய்கிறார்கள் என்பதால் சொல்லவில்லை.
காகிதங்களைப் பயன்படுத்தும் அவர்களின் சுத்தத்தை அவர்கள் தங்கும் விடுதிகளில் விட்டுச் செல்லும் எச்சங்கள் சொல்லும். அதற்காக மலத்துடன் கைகள் நேரடி தொடர்பு கொள்வதை நாம் நியாப்படுத்தி சமாளிக்க முயல்வது அறிவுடைமையோ, ஏற்புடையதோ அல்ல.
ஏனெனில் கழிவுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. இப்போதைக்கு கைகளை சோப்பு போட்டுக் கழுவுவதை இதற்குத் தீர்வாக முன்வைக்கிறோம். இதன்மூலம் நக இடுக்குகள் உள்ளிட்ட கைகளின் ஒவ்வொரு பகுதியும் முழுத் தூய்மை அடைவதை உறுதி செய்து கொள்ள முடியாது. ஆகவே அதிக விசையில் செயல்படும் நீர்த் தெளிப்பான்கள் (Waterjet) எல்லா கழிப்பறைகளிலும் கண்டிப்பாக இடம்பெறச் செய்து இந்தப் பயன்பாட்டுக்கு மக்களை மாற வைக்க வேண்டும்.
மக்களும் அரசும் இணைந்த கண்காணிப்பை ஏற்படுத்துவது
இதற்கு அடுத்த கட்டமாக அமர்ந்த இடத்தில் தானியங்கி முறையில் நீர்த்தெளிக்கும் (Bidets) நவீன வசதிகளைக் கொண்ட கழிப்பறைகளை, குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். ஜப்பான் செல்லும் சீனத்து பெண்கள் அங்கிருக்கும் ஆண், பெண் பிறப்புறுப்பு ஆசனவாய் பகுதிகளுக்கு ஏற்ப அந்தந்த பகுதிக்கு நீரை பீய்ச்சி அடிக்கும் இந்தச் சாதனங்களின் வசதியில் மயங்கி காதல் கொள்ளும் காணொலிகளை இணையத்தில் காணலாம்.
அந்த அளவுக்கு பயன்படுத்த ஏதுவாக பெண்களின் சுகாதாரத்தைப் பேண அது இனிமையாக இருக்கும். அடுத்து, கழிப்பறை பகுதிகளில் ஏற்படும் துர்நாற்றத்தைத் தடுப்பது முக்கிய சவாலாக இருந்து வருகிறது. தற்போது சிறுநீர் கழிப்பிடங்களில் கைகளால் இயங்கும் நீர்த்தெளிப்பான்கள்தான் பயன்பாட்டில் இருக்கிறது.
நம்மவர்கள் சிறுநீர் கழித்த பின்பு பெரும்பாலும் அதை அழுத்தி கழிவுநீரை ஓடச் செய்வதில்லை. சிறுநீர் வெளியேற்றத்தின்போது உடன் வெளியேறும் அமோனியா உள்ளிட்ட வாயுக்கள் அங்கேயே சுழன்று கொண்டிருக்கும். பற்றாக்குறைக்கு இந்த நீரும் கழிவுநீர் வடிகால் பிரச்சினையால் தேங்கினால்… பிறகென்ன அந்த பகுதி முழுக்க ‘மல்லிகை’ மணம்தான்.
ஆதலால் இப்போது இருக்கும் பகுதியளவு தானியங்கி நீர் தெளிப்பு சாதனங்களை (Manual flush) மாற்றி முழுமையான தானியங்கி சாதனங்களை (Auto flush) பொறுத்த வேண்டும். இது நோய்த்தொற்று கொண்டவர் கைவைத்த இடத்தில் மற்றவர்கள் கைவைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து நீரை சேமிக்கவும் உதவும் (கொரோனா தந்த பாடம்). இதன் அடுத்த கட்டமாக அமோனியா உள்ளிட்ட துர்நாற்றத்துக்கு காரணமான வாயுக்களின் அளவைக் கண்டறியும் உணரிகளை (Sensor) உருவாக்கி பொதுக் கழிப்பறைகளில் பொருத்தி அதன் சுற்றுப்புற தூய்மையைக் கண்காணிக்க வேண்டும்.
அது அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டும்போது உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்துக்கு எச்சரிக்கை சமிக்கையை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்க வேண்டும். இதனோடு ஒவ்வொரு பயனாளரும் கழிவறையை விட்டு வெளியேறும்போது அதன் தூய்மை குறித்து ஆம்/இல்லை போன்ற கருத்தை பதிவு செய்ய ஏற்பாடு செய்து, அதைக் கழிவறையின் முகப்பு திரையில் தோன்றச் செய்ய வேண்டும். இந்த மக்கள் மற்றும் அரசின் ஒருங்கிணைந்த கண்காணிப்பு இப்போதிருக்கும் சூழலை பெருமளவு மேம்படுத்தும்.
ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டின் அங்கமாக்குவது
அடுத்த பிரச்சினை, போதுமான தண்ணீர். இந்த வருடம் போதுமான அளவு மழை பெய்துள்ளதால் நீருக்கு பிரச்சினை இல்லை. தண்ணீரை வெளியேற்றுவதுதான் பிரச்சினை. சில நேரம் ஓரிரு வருடங்கள்கூட போதுமான மழையின்றி நாம் வறட்சியைச் சந்தித்து வருகிறோம். அப்படி நீரின்றி போனால் இந்த மொத்தக் கட்டமைப்பும் பயனின்றி போகும். தண்ணீர் தேக்கம், வறட்சி ஆகிய இரண்டுக்கும் தீர்வு வடிகால், கழிவுநீர் கால்வாய்களை மேம்படுத்துவது.
இப்போது நகரங்கள் எந்த திட்டமிடலும் இன்றி தான்தோன்றித்தனமாக இயங்கி விரிவடைந்து கொண்டிருக்கிறது. அவற்றை ஒழுங்குபடுத்தி நகரின் அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் மூடிய அமைப்புகளாக மாற்றி, அந்த நீரை ஓரிடத்தில் சுத்திகரித்து கழிவறைகள், மரங்கள் வளர்ப்பு, சூரிய மின்னாற்றல் தகடுகளை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். மேலும், நகரங்களின் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை ஆழப்படுத்தி அதை நீராதார ஆறுகள், ஓடைகளுடன் இணைத்து அதிலிருந்து நீரைப் பெறுவதை அரசு உறுதி செய்யலாம்.
தற்காலிகமாக பொதுக் கழிவறைகளில் வெளியேறும் நீரைச் சுத்திகரித்து அங்கேயே மீண்டும் கழிவு வெளியேற்றத்துக்குப் பயன்படுத்தும் சாத்தியம் குறித்தும் சிந்திக்கலாம்.
ஆக, கழிப்பறை பிரச்சினையைத் தனியாகத் தீர்க்க முடியாது. மொத்த உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஓர் அங்கமாகவே அதை அணுக இயலும். ஒரு குடியிருப்பு அல்லது நகரம் என்றால் அங்கே குடிநீர் ஆதாரம், மின்சாரம், கழிவுநீர், மழைநீர் வெளியேற கால்வாய்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு, குப்பைகள் வெளியேற்றம் மற்றும் மறுசுழற்சி, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய கட்டமைப்புகள் இன்றி இருக்கக் கூடாது.
இப்போது அரசு சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்ற முழு வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்ற நகரங்களை மாற்றாந்தாய் மனநிலையுடன் நடத்தும் அரசின் இந்த போக்கு ஏற்புடையது அல்ல. ‘சீர்மிகு நகரங்களைக் கொண்ட செழிப்பான தமிழகம்’ என்ற இலக்குடன் மொத்த தமிழகத்துக்குமான உள்கட்டமைப்புத் திட்டங்களை தீட்டிச் செயல்படுத்த முனைய வேண்டும்.
மூலதனத்துக்கும் நிதிக்கும் எங்கே செல்வது?
பொதுக் கழிவறைக்குள் உள்ளே நுழைவதற்கு முன் சுத்தம் செய்ய கருவி, வெளியேறும்போது கருத்தை பதிவிட கருவி, சிறுநீர் கழிக்கும் பகுதியில் தானியங்கி நீர்த்தெளிப்பான், கழிவறையில் பகுதியளவிலேனும் தானியங்கி முறையில் இயங்கும் நீர்த்தெளிப்பான்கள், தரையின் ஈரத்தை உலர்த்த மின்விசிறி, கெட்ட வாயுக்களை இழுத்து வெளியேற்ற மேற்கூரை மின்விசிறிகள் என இவ்வளவும் இயங்க அதிக அளவு மின்சாரம் தேவை.
கோடைக்காலமல்லாத மற்ற நாட்களில் கூட பலமுறை மின்வெட்டு என்பதுதான் தமிழகத்தின் இன்றைய எதார்த்தம். இப்படி மின்சாரம் இல்லாமல் போனால் பொதுக் கழிவறைகள் நாறுவது உறுதி. இதைப் படிப்பவர்கள் உடனே சூரிய மின்னாற்றல் தகடுகள், மின் சேமிப்புக் கலங்களை பரிந்துரைக்கலாம்.
ஆனால், இவ்வளவு நவீன சாதனங்கள் கொண்ட பொதுக் கழிப்பறையை நிறுவுவது மிகுந்த செலவு பிடிக்கும் ஒன்றாக இருக்கும். அதற்கான மூலதனத்துக்கு எங்கே செல்வது? இவ்வளவு செலவு செய்து எத்தனை பொதுக் கழிப்பறைகளைக் கட்ட முடியும்? அப்படியே கட்டினாலும் இவற்றை பராமரிக்க நிதிக்கு என்ன செய்வது?
அடுத்த பதிப்பில் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு
தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
திறந்தவெளி கழிப்பிடப் பிரச்சினையின் பரிமாணங்கள்: பகுதி 1
திறந்தவெளி கழிப்பிடப் பிரச்சினைக்குத் தீர்வென்ன? – பகுதி 2