ஆலயங்களில் அறிவாலயங்களை எழுப்புவோம்! – பகுதி 4

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ்

திறந்தவெளி கழிப்பிட பிரச்சினையால் பாதிக்கப்படும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழைகளை உடனடியாகக் காக்கும் விதமாக அவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் மக்களின் இருப்பிடங்களைக் கண்டறிந்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அதேவேளை… அவர்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

நீண்டகால தீர்வாக அனைத்து கட்டமைப்புகளின் அங்கமாக கழிப்பிடத்தை மாற்ற வேண்டும். இதை தொழிற்துறையினர், சிறு, குறு உற்பத்தியாளர்கள், வணிகர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த வேண்டும். அதோடு பொதுக் கழிவறைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.

அப்படிக் கட்டப்படும் பொதுக் கழிவறைகளின் வடிவமைப்பை நவீனமாக்குவதோடு தமிழகத்தின் அனைத்து பகுதிகளின் நீர், மின்சாரம், வடிகால், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும்.

பொதுக் கழிப்பறைகள் ஓய்வறைகளாக…

இப்படி நவீன வசதிகளுடன் கட்டப்படும் பொதுக் கழிவறைகள் மக்கள் கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில்தான் அமையும். இவ்விடங்களில் கழிவறைகள் மட்டுமல்ல, தாய்மார்கள் பாலூட்ட, முதியோர்கள் இளைப்பாற, பயணிகள்  ஓய்வெடுக்க ஓர் ஓய்விடமும் தேவை.

குறிப்பாக, கோடைக்காலங்களில் குளிரூட்டியுடன் கூடிய இப்படியான இடங்கள் மக்களுக்குப் பேருதவியாக இருக்கும். இந்த ஓய்விடங்களில் செய்தித்தாள்கள், அரசின் நலத்திட்டங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், அறிவிப்புகளை விளக்கும் காணொலிக் காட்சிகளை இடம்பெறச் செய்யலாம். அரசின் நடவடிக்கைகளும் திட்டங்களும் தொலைக்காட்சியில் ஒருமுறை அறிவித்து விடுவதாலோ, முகநூல், ட்விட்டரில் பதிவிட்டு விடுவதாலோ கடைகோடி மக்களுக்கும் சென்று சேர்ந்து விடுவதில்லை.

பெரும்பான்மையினருக்கு அரசின் பெரும்பாலான திட்டங்கள் குறித்து எதுவும் தெரிவதில்லை. ஆதலால் மக்கள் கூடும் இடங்களில் இப்படியான தொடர் நினைவூட்டல்கள், விளக்கப் படங்கள் மிகவும் அவசியம். அதுவும் அரசின் செய்தித்தொடர்பை ஒன்றியம் கட்டுப்படுத்த நினைக்கும் இந்தச் சூழலில் இப்படியான செயல்பாட்டின் மூலம் அந்த முட்டாள்தனத்துக்கு உரிய பாடம் புகட்டலாம்.

இந்த ஓய்வறைகள் சத்தம் உள்ளே நுழையாத அறைகளாகவும் இருக்கும். காதைச் செவிடாக்கும் அளவுக்கு இரைச்சல் மிகுந்த இடத்தில் அமைதியான இந்த இடம் தரும் இதத்தை மக்கள் உணரும்போது வெளியில் அப்படி சத்தம் எழுப்ப தயங்குவார்கள். அப்படிச் செய்பவர்களை தடுக்கவும் முற்படுவார்கள்.

நான்கு பேர் வரிசையில் நின்றாலும் இடித்துக் கொண்டுதான் நிற்கிறோம். பொதுவிடங்களில் நின்றுகொண்டு அலைபேசியில் கத்துகிறோம் அல்லது கத்த விடுகிறோம். இவை எல்லாம் மற்றவருக்கு எந்தவிதமான தொல்லை தரும் என்ற எண்ணம் சிறிதும் இருப்பதில்லை. பொதுவெளியில் புகைப்பவர்களும் இப்படியான எண்ணமற்று எங்கும் புகைத்துச் செல்கிறார்கள்.

அலைபேசியில் பேசவும், புகை பிடிக்கவும் அனுமதிக்கப்பட்ட இடங்களை இங்கே உருவாக்கி அதன் முக்கியத்துவம் குறித்த எண்ணத்தை விதைக்கலாம். திறந்தவாய் மூடாமல் கத்தி பேசி நேரத்தை வீணாக்கி பழகிய நமக்கு, செவிக்கு உணவு இல்லாதபோது வயிற்றுக்கு ஈயச்சொன்ன வள்ளுவரின் வாக்கை மறந்துவிட்ட நமக்கு… இப்படி அமைதியாக, அடுத்தவரை தொந்தரவு செய்யாமல், பயனுள்ள வகையில் நேரத்தைப் போக்க இவ்விடங்கள் பழக்கப்படுத்தும்.

கழிவறைகளுடன் கூடிய படிப்பறைகளாக…  

கழிவறைகளுடன் கூடிய ஓய்வறைகளோடு மாணவர்களும், பெரியவர்களும் படிக்க இரைச்சலும் திறன்பேசி கவனச்சிதறலும் அற்ற படிப்பறைகளையும் இத்துடன் இணைக்கலாம். அங்கே அலைபேசிகளின் சமிக்கைகள் துண்டிக்கப்பட்டு இணையக்கல்வி தொடர்பானவற்றை மட்டும் கணினியில் பார்க்க ஏற்பாடு செய்து தரலாம். இப்போது இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களுக்கும் பெருநிறுவனங்களின் சங்கிலித்தொடர் கடைகள் சென்றிருக்கின்றன.

அவர்களுக்கு உவப்பான வணிக வளாகங்களைப் பெரிய வர்த்தக மதிப்பற்ற இந்தப் பகுதிகளில் யாரும் கட்ட மாட்டார்கள். இந்த கட்டமைப்பின் ஒரு பகுதியாக வர்த்தகத்துக்கும் ஒரு தளத்தை ஒதுக்கலாம்.

உணவு விற்பனைக்கு மற்றொரு தளத்தை ஒதுக்கலாம். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேநீர், குளிர்பானங்கள் விற்க இடமும் அந்தப் பகுதி குழு உருவாக்கும் பொருட்களை காட்சிப்படுத்தி விற்க இடமும் இதில் ஒதுக்கலாம். இப்படி முக்கிய இடத்தில் பொதுக் கழிவறையும் வாகன நிறுத்தமும் கொண்ட அரசின் பல்நோக்கு அடுக்ககத்தை ஏற்படுத்தி அதில் வரும் வருவாயைக் கொண்டு மற்ற இடங்களில் பொதுக் கழிவறைகளைக் கட்டி பராமரிக்கலாம். படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் தேவைக்கு ஏற்ப இந்த சேவைகளை விரிவாக்கலாம்.

நவீன கழிவறை வசதியுடன் கூடிய அரசின் திட்டங்களை செய்திகளை எடுத்துச் சொல்லும் செய்தி அறையும் பெரியவர்களுக்கும் மாணவர்களுக்கும் அவசியமான படிப்பறையையும் கொண்ட கட்டமைப்பை நகரங்களில் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் ஏற்படுத்த வேண்டியது அவசியமானது.

அது ஒவ்வோர் ஊரிலும் சென்னையில் கட்டப்பட்டிருக்கும் மாபெரும் அண்ணா நூலகத்தின் சிற்றுருவாக்கமாக (Miniature) திகழும் சாத்தியம் கொண்டது. கிராம நகர்ப்புற மாணாக்கர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. ஆனால், பெரும் முதலீட்டைக் கோருவது.

அதுகுறித்து நாம் அதிகம் கவலை கொள்ள தேவையில்லை. ஏனெனில் இப்படியான கட்டமைப்பை நிறுவுவதற்கான இடத்தையும் அதற்கான மூலதனத்தையும் கொண்ட முக்கிய கட்டமைப்பு ஒன்று நம்மிடம் இருக்கிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங்களிலும், கிராமங்களின் மையத்திலும் பெரிய வைணவ, சிவன் கோயில் இருக்கும். அவற்றுக்கு பல ஏக்கர் நிலங்கள் மானியங்களாகவும் இருக்கும். கோயில்கள் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலும் நிலங்கள் சில நிலவுடைமைகளின் பயன்பாட்டிலும் இருக்கும்.

ஆலயங்களில் அறிவாலயங்களாக…

இவை நடைமுறையில் இருக்கும் நால்வர்ண சாதிய கட்டமைப்பின் இதயம். அதை மையமாக வைத்து எழுப்பப்பட்ட சாதிய சமூக கட்டமைப்பு இன்றும் உயிர்ப்புடன் நீடித்து நிலைத்திருப்பதன் சாட்சி. சமூகத்தில் வாழும் இந்த சாதியையும் கோயில்களையும் ஒரே நாளில் உடைத்து ஒன்றுமில்லாமல் ஆக்க முடியாது. படிப்படியாக அவற்றின் முகத்தை, பரிமாணத்தை மாற்றி அமைப்பதன் மூலமே இவற்றை நாம் நமது வலிமிகுந்த சோக வரலாற்றின் வடுக்களாக்க முடியும்.

கடந்த காலங்களில் நம்மவர்கள் செய்த கோயில் நுழைவு, கருவறை நுழைவு போராட்டங்கள் இதன் இதயத்தில் செருகப்பட்ட ஈட்டி. அது பெரும்பான்மை மக்களை இந்த இதயத்துக்குள் (கோயில்களுக்குள்) நுழைய விடாமல் அடைத்துக்கொண்டிருந்த தீண்டாமை எனும் அடைப்பை எடுத்து எல்லோரையும் உள்ளே நுழைய வைத்தது. அதன்பிறகு இதன் முகத்தை மாற்ற, நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளைவு இன்று அது எதிரிகளின் கூடாரமாக மாறி நிற்கிறது.

மக்களைப் பொறுத்தவரையில் இன்றும் இது கேள்விக்கிடமற்ற புனித சின்னம். இந்த வழிபாட்டு புனித பிம்பத்துக்கு மாற்றாக இதைப் படிப்படியாக மற்ற பயன்பாட்டுக்கும் மாற்றி மக்கள் மையப்படுத்தி அந்தப் புனித பிம்பத்தை உடைக்க வேண்டும். அது கோயில் மற்றும் நிலங்களின் பயன்பாட்டை அதிகரித்து, உற்பத்தித் திறனைக் கூட்டி இக்கட்டமைப்பை சமூகமயமாக்கும்.

இப்போது இந்து அறநிலையத்துறை கோயில்களின் வருமானத்தை பூஜைகள், பூசாரி சம்பளம், குடமுழுக்கு, கோசலை பராமரிப்பு, அன்னதானம் போன்ற பணிகளுக்குச் செலவிடுவதோடு சில கல்லூரிகளையும் நடத்துகிறது. அத்துடன் கழிப்பறைகளுடன் கூடிய படிப்பறைகளை அனைத்து ஊர்களிலும் நடத்த வேண்டும். ஆலயங்கள் கட்டுவதைவிட கழிப்பறைகளைக் கட்டுங்கள் என்று சொன்னார் இந்துத்துவர்களின் ஏகபோக நலனைப் பிரதிபலிக்கும் தலைமை அமைச்சர் மோடி.

அவர் அளவுக்கு நாம் கடுங்கோட்பாட்டாளர்கள் அல்லர். இருக்கும் கோயில்களில் இந்துக்களின் அறிவை பெருக்க அறிவகமும் அங்கு வரும் இந்து பக்தர்(தை)களின் அவசர தேவைக்கு நவீன சுத்தமான கழிப்பறைகளையும் தான் கட்டச் சொல்கிறோம். அரசின் இந்த ஆலயங்களில் அறிவாலயங்கள் திட்டத்தை எதிர்க்க தமிழகத்தில் எந்த காலிக்கும் துணிவு இருக்காது. அப்படி எதிர்த்தால் மக்கள் மத்தியில் அவர்கள் கோமாளிகள் ஆவது உறுதி.

பெண்களே ஆலய அறிவாலயங்களின் நிர்வாகிகளாக…  

இவற்றை அரசு இலவசமாக வழங்கக் கூடாது. இப்படியான அரச பொதுக்கட்டமைப்பை மக்கள் யாரோ ஒருவரின் சொத்தாக நினைத்து அதைப் பயன்படுத்துவது, பொறுப்பற்று பாழாக்குவது, சில நேரங்களில் சிதைக்கும் வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். அங்கு இருக்கும் அரச ஊழியர்களும் யார் என்ன செய்தால் எனக்கென்ன… மாதமானால் எனக்கு சம்பளம் வந்துவிடும் என வாளாவிருப்பது நாம் எங்கும் காண்பது.

மேலும் இது வேலையின்றி ஊரில் சுற்றும் காலிகளின் மடமாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது. ஆதலால் இப்படியான சேவைகளை அரசு மணிக்கு இவ்வளவு எனக் கட்டணத்துடன் வழங்க வேண்டும். மாணவர்களுக்கு, முதியோருக்கு, சலுகை விலையில் வழங்கலாம்.

இங்கு வேலை செய்பவர்களுக்கு போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுப்பதைப் போல அடிப்படையான சம்பளத்துடன் இந்தப் பயனாளிகள் செலுத்தும் கட்டணத்தில் ஒரு பகுதியை இவர்களுக்குக் கொடுத்து ஊக்குவிக்கலாம். அது அவர்களைப் பொறுப்புடன் இந்த சேவைகளை எடுத்துரைத்து விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களைத் தக்கவைத்து வருமானத்தை கூட்டக் கோரும்.

அரச ஊழிய எஜமான சிந்தனையில் இருந்து மக்கள் சேவையாளர் சிந்தனைக்கு அவர்களை மாற்றும். வாடிக்கையாளர்கள் தேவையறிந்து சேவைகளைக் கூட்ட அவர்களை அரசுக்கு பரிந்துரைக்க வைக்கும். இப்போதிருக்கும் இல்லம் தேடி கல்வி முறையில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவதைப் போல எதிர்காலத்தில் இந்தக் கட்டமைப்புகளில் கல்வி புகட்ட இணைத்துக் கொள்ளலாம்.

இந்த அறிவாலயங்களுடன் நவீன வசதிகளும் ஊட்டச்சத்தான உணவுடனும் கூடிய குழந்தைநல மையங்களையும் ஏற்படுத்தி இவற்றுடன் இணைத்து செயல்படுத்த முனையலாம். அது எல்லா சாதி பிள்ளைகளும் ஒன்றாக வளரும் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்தப் பணிகளுக்கென சிறப்புப் பயிற்சி அளித்து பெரும்பாலும் பெண்களை (இட ஒதுக்கீட்டுடன்) பணியமர்த்த வேண்டும்.

நிர்வாக உயர் பதவிகளில் நூறு விழுக்காடு பெண்களுக்கே ஒதுக்க வேண்டும். காலை முதல் இரவு வரை சுழற்சி முறையில் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்யும்படி நிர்வகிக்க வேண்டும். நாளுக்கு இருமுறை காவலர்கள் இம்மையங்களுக்குச் சென்று பாதுகாப்பை உறுதிசெய்து கையொப்பமிட வைக்க வேண்டும்.

மந்திர மகிமையா? நூற்களின் ஆற்றலா? பார்த்துவிடலாம்!  

எந்த கோயிலை மையமாக வைத்து இந்த சாதிய அசமத்துவம் உருவானதோ அங்கேயே சமத்துவ தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். எந்த பெண்ணை புனிதம், தீட்டின் பெயரால் ஒது(டி)க்கி சாதியைக் கட்டமைத்தார்களோ அந்த பெண்ணை வைத்தே அதை உடைக்க முற்பட வேண்டும். எது கல்வியை மறுத்து சூத்திர-பஞ்சம பட்டம் சூட்டியதோ, அதை வைத்தே அறிவைப் புகட்ட வைக்க வேண்டும்.

எங்கே வேலையில் சுத்தம்-அசுத்தம்  கற்பிக்கப்பட்டதோ, அங்கேயே அந்த எண்ணத்தை மாற்றி தூய்மைக்கான பயணத்தைத் தொடங்கி வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை, திருவிழா நாட்களை தவிர கேட்பாரற்று கிடக்கும் கோயிலுக்கு நாமே எல்லா நாளும் பக்தர்களை வரவழைத்துக் கொடுப்போம். அவர்களின் கடவுளுக்கும் மந்திரத்துக்கும் மகிமை இருந்தால் தமிழகத்தில் பக்தியையும் தட்டில் விழும் காணிக்கையையும் பெருக்கட்டும். நாம் வைக்கும் படிப்பறைக்கும் அங்கிருக்கும் நூற்களுக்கும் ஆற்றல் இருந்தால் அறிவைப் பெருக்கி அறிவாலய வருமானத்தை கூட்டட்டும்.

அவர்கள் வென்றால் அறிவகத்தை மூடிவிட்டு பெண்கள் வீட்டுக்குள் முடங்கட்டும். நாம் வென்று தட்டில் விழும் காணிக்கை குறைந்தால் அவர்கள் அறிவகத்தில் வேலைக்குச் சேரட்டும். ஆனால், கழிவறை சுத்தம் செய்வது முதல் அனைத்து வேலைகளையும் செய்ய அவர்கள் சித்தமாய் இருக்க வேண்டும். அங்கு சிறப்புச் சலுகை கோரக்கூடாது.

இந்த வேலைகள் செய்து பழக்கமில்லை ஆதலால் எங்களுக்கு EWS முறையில் தனி ஒதுக்கீடு வேண்டுமென கேட்டால் நிச்சயம் கொடுக்க வேண்டும். ஆனால், மேலாடையின்றி பெண்கள் முன் ஆபாசமாக நிற்க அனுமதிக்கலாகாது. இதைப் படித்தவுடன் சூத்திர-பஞ்சம பயல்களின் கொழுப்பை பாத்தேளா என நம் மீது சிலர் பாய முற்படலாம்.

அவர்களுக்கு நாம் சொல்லும் பதில் இது உங்களால் கல்வி மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சூத்திர-பஞ்சமர்களின் கொழுப்பல்ல; கல்வி கற்று பட்டம் பெற்று நாங்கள் தேசம் பல செல்லும் இந்நாளிலும் உங்களால் கொடுக்கப்பட்ட இழிபட்டம் இன்னும் போகவில்லையே என குமையும் திராவிடர்களின் கொதிப்பு.

பின்குறிப்பு: இப்போதிருக்கும் மலை உச்சியில் இருந்து பாறையிடுக்குகள் வழியாக வழியும் இந்தச் சொட்டு நீர் பொருளாதார முறையைக் கொண்டு அரசால் இவற்றை எல்லாம் சாதித்துவிட முடியாது. அதேபோல முறையற்று அலங்கோலமாகத் தெரியும் நமது பொதுவெளி மக்கள் ஒருங்கிணைந்த சமூகமாக திரளாமல் உதிரிகளாக திரிவதன் வெளிப்பாடு.

முந்தைய சாதிய இனக்குழு நிலவுடைமை கட்டமைப்பை தமிழகம் உடைத்திருப்பது உண்மைதான். ஆனால், அந்த இடத்தில் மாற்று ஜனநாயக சமூக கட்டமைப்பு ஏற்படவில்லை. இங்கு உழைப்பாளர்கள் உழைத்து உருவாகும் செல்வம் அனைத்தையும் முதலாளித்துவ ஏகாதிபத்தியமும், பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியமும் உறிஞ்சி மூலதனமாக்கிக் கொள்வதால் அப்படியான ஜனநாயக சமூக மாற்றம் நடைபெறாமல் இருக்கிறது.

மாற்று பொருளாதார முறையை முன்னிறுத்தி மக்களை அரசியல்மயமாக்கி முதலாளித்துவ பார்ப்பனிய ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி உண்மையான சமூக மாற்றத்தைச் சாதிப்பது எப்படி என்பதை இங்கே விவாதிப்பது சாத்தியம் இல்லை.
அதைத் தனியாக வேறொரு தொடரில் பார்க்கலாம்.  

திறந்தவெளி கழிப்பிடப் பிரச்சினையின் பரிமாணங்கள்: பகுதி 1

திறந்தவெளி கழிப்பிடப் பிரச்சினைக்குத் தீர்வென்ன? – பகுதி 2

கழிவறை கட்டமைப்பையும் சுற்றுப்புறத்தையும் மேம்படுத்துவது எப்படி?- பகுதி-3

கட்டுரையாளர் குறிப்பு

Open defecation and free toilets3 status in Tamil Nadu Part 3
பாஸ்கர் செல்வராஜ்,

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.